சென்னை துறைமுகத்தில் வந்திறங்கிய சீனா பூனை – பரவும் கொரோனா வைரஸ் பீதி! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சீனாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டதாக சொல்லப்பட்ட பூனை தொடர்ந்து சென்னை துறைமுகத்திலேயே வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவிய நேரத்தில், கடந்த பிப்ரவரி 7-ம் தேதி சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு தனியார் நிறுவனத்தின் கன்டெய்னர் ஒன்று வந்துள்ளது. அதில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள குளியலறை பொருட்கள், விளையாட்டுப்பொருட்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன.

அந்த கன்டெய்னரைத் திறந்து பொருட்களை எடுத்தபோது, சீனாவிலிருந்து ஒரு பூனையும் வந்துள்ளதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளார்.  அப்போது காவல் பணியில் இருந்த நாகராஜன், பூனை இருந்தது குறித்து உடனடியாக பாதுகாப்பு கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.சாவகாசமாக இரண்டு நாட்கள் கழித்து வந்த அரசு அதிகாரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் கன்டெய்னரை இழுத்து மூடி சீல் வைத்தனர்

ஆனால், பூனையை ஒரு கூண்டில் அடைத்து வைத்த அதிகாரிகள், பூனைக்கு பிஸ்கட், பால் கொடுத்து கவனித்துக்கொள்ளும்படி காவலாளி நாகராஜனிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில், கன்டெய்னர் உரிமையாளர் வசந்த் என்பவர், துறைமுகத்திற்கு சென்று, பாதுகாப்பு கண்காணிப்பாளரை சந்தித்துள்ளார். நாகராஜன் சொன்ன தகவலால் கன்டெய்னர் சீல் வைக்கப்பட்டதால் தனக்கு அதிகமாக நஷ்டம் ஏற்பட்டதாகவும் நாகராஜனை பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கொந்தளித்துள்ளார்.

பாதுகாப்பு கண்காணிப்பாளர் பார்த்திபன் என்பவர், தன்னை அழைத்து தகராறில் ஈடுபட்டு தன்னைத் தாக்கியதோடு பணியில் இருந்தும் நீக்கினார் என்கிறார் பாதிக்கப்பட்ட நாகராஜன். அவர் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக சம்பந்தப்பட்ட கன்டெய்னரும், பூனையும் துறைமுகத்திலேயே வைக்கப்பட்டிருப்பதாகத்த தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதும் பீதியை கிளப்பியுள்ள நிலையில், பூனை விவகாரத்தில் துறைமுக நிர்வாகம் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விலங்குகளிலிருந்து கொரோனா வைரஸ் பரவுமா என்பது குறித்து மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன் அளித்த விளக்கத்தில், விலங்குகளில் கொரோனா வைரஸ் பலகாலமாக இருந்து வருகிறது. அது புதிதல்ல. ஆனால் விலங்குகளில் இருக்கும் வைரஸ் COVID 19 என்பதுதானா என்று  கண்டறியப்பட வேண்டும். அதற்கான மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. விலங்குகளிடமிருந்து கொரோனா பரவவில்லை என்பதை உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்றார்

ஹாங்காங்கில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாயிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பூனை விவகாரத்தால், துறை முகப்பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பார்க்க: கொரோனா தற்காப்பு வழிமுறைகள்

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/cat-in-chennai-port-from-china-msb-263935.html