பற்றி எரியும் வட சென்னை: அடுத்தடுத்து தீ விபத்துகள்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
பற்றி எரியும் வட சென்னை: அடுத்தடுத்து தீ விபத்துகள்!
வட சென்னையில் அதிகளவிலான தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. மொத்தமாக ஒரே இடத்தில் இத்தனை ஆலைகள் இருப்பதால் இங்கு காற்று மாசுபாடு அதிகளவில் உள்ளது. மேலும் இதைச் சுற்றியுள்ள இடங்களில் மக்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன.

சென்னை மாதவரத்தில் உள்ள ரசாயணக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசமாகின. இதனால் உருவான தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இரவு பகலாக தொடர்ந்த தீயை அணைக்கும் பணி 20 மணி நேரத்துக்குப் பின்னரே முடிவுக்கு வந்தது. இந்தப் பகுதியும் மக்கள் நெருக்கமான பகுதியாகும்.

இந்த விபத்து ஏற்படுத்திய அதிர்வலைகளே அடங்காத நிலையில் வட சென்னைப் பகுதியில் இன்று ஒரே நாளில் இரண்டு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

thermal power plant fire accident in chennai

சென்னை அனல் மின் நிலையத்தில் தீ விபத்து!
Loading

திமுகவுக்கு ஆறுதல் கூறும் அதிமுக: அறிக்கையில் காணாமல் போன ‘கலைஞர்’!

திருவள்ளூர் அருகே வல்லூர் அனல் மின்நிலையத்தின் முதலாவது பிரிவில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் இருந்து நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 4 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து அமைத்துள்ள வல்லூர் அனல் மின் நிலையம் மூன்று அலகுகள் கொண்டது. அவற்றில் தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தற்போது விபத்து காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அன்பழகன் மறைவுக்கு கமல், தினகரன், ராமதாஸ் இரங்கல்!

இதேபோல் திருவொற்றியூர் இந்திராநகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மரக்கிடங்கு ஒன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்கள் அதிகாலை 2.30 மணிக்கு தகவல் கொடுத்த நிலையில் தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை உள்ளிட்ட இடங்களிலிருந்து 8 தீயணைப்பு வாகனங்கள், 5 குடிநீர் வாகனங்கள் ஆகியவற்றில் வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வட சென்னைப் பகுதிகளில் அடுத்தடுத்து பெரியளவிலான தீ விபத்துகள் நிகழ்வதால் அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/two-different-fire-accidents-in-north-madras-today-march-7th/articleshow/74524459.cms