சென்னை சர்ச்களில் முத்தம் இல்லை நமஸ்தே மட்டுமே, கொரோனா கொடுமை! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னை சர்ச்களில் முத்தம் இல்லை நமஸ்தே மட்டுமே, கொரோனா கொடுமை!
புனித வெள்ளி கொண்டாட்டங்கள் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரம் வந்த புதன்கிழமை அன்று தொடங்கியது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த நாளாக நம்பப்பட்டு, அந்த தினத்தைப் புனித வெள்ளியாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் அடையாளப்படுத்தி வழிப்பாட்டு நடத்தி வருகிறார்கள். இந்த வழிப்பாட்டு முறையின் ஒருபகுதியாகத் தேவாலயங்களுக்குச் சென்று ஜெப மாலைக்கு முத்தம் கொடுத்து பாதிரியாரிடம் ஆசி பெறுவார்கள்.

இந்தாண்டு புனித வெள்ளி அனுசரிப்பு கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் புனித வெள்ளி தினத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிப்பாட்டு முறை குறித்து சென்னை மறைமாவட்ட ஆயர் மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக சில விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவாலயங்களில் நண்பர்கள், உறவினர்களைச் சந்திக்கும்போது கைகுலுக்க வேண்டாம், கைகூப்பிக் கும்பிடுங்கள். குறிப்பாகப் புனித வெள்ளி தினத்தில் ஜெப மாலைக்கு யாரும் முத்தமிட வேண்டாம். பதிலாக குனிந்து மரியாதை செலுத்தினால் போதுமானது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா: கேரளாவுக்கு பூட்டு, இந்தியாவின் கவுண்ட் 62!

இதற்கிடையே தேவாலயங்களில் நுழைவதற்கு முன் வழங்கப்படும் புனித நீரும் இந்த முறை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடும் இடங்களில் மிகவும் கவனமாக இருக்கும் படி அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் பக்தர்களும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனாவால் இதுவரை உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 299 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையினால் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 226 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில் இந்தியாவில் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கேரளாவைச் சேர்ந்த 3 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் என இந்த வைரஸ் தொற்றிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/coronavirus-impact-chennai-churches-made-restrictions-for-good-friday/articleshow/74571000.cms