சென்னை மண்ணடியில் சிஏஏ எதிர்ப்பு போராட்ட களத்திற்கு வந்த முக ஸ்டாலின்.. ஆதரவாக பரபரப்பு பேச்சு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை மண்ணடியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வரும் முஸ்லிம் அமைப்புகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடர்ந்து 27 நாட்களாக மண்ணடியில் போராடி வரும் முஸ்லிம் அமைப்பினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதற்காகவும். சட்டமன்றத்தில் பேசுவதற்காகவும் நன்றி தெரிவித்தனர். மேலும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில் சென்னை மண்ணடியில் 27வது நாளாக நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், லோக்சபாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக வாக்களித்தது. ஆனால் மாநிலங்களவையில் அதிமுக ஆதரவுடன் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேறியது. அதிமுக சிஏஏவை எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் நிறைவேறி இருக்காது என்றார்.

முன்னதாக இன்று காலை என்ஆர்சி தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயகுமாருக்கும் சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்தது .

அப்போது பேசிய ஸ்டாலின்,ஸ்டாலின் என்.பி.ஆர்.அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றுவதில் என்ன பிரச்சனை என கேள்வி கேட்டார்.அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்படி கட்டுப்படுத்தும்? நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு மாநில சட்டமன்றம் கட்டுப்பட்டது என்று பதில் அளித்தார்

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட பிறகு கடிதம் எழுதியுள்ளீர்கள், நீங்கள் கூறும் விளக்கத்தை எப்படி ஏற்றுக்கொள்வது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயக்குமார், விளக்கம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. என்.பி.ஆர் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என சுட்டிக்காட்டினார் இப்படி வாதம் நீண்டது.

இதையடுத்து என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/dmk-leader-mk-stalin-directrly-visit-and-support-at-anti-caa-protest-in-mannadi-chennai-379441.html