நெதர்லாந்துக்கு கடத்த முயன்ற ‘ப்ளூ பனிஷர்’ போதை மாத்திரைகள்: சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

நெதர்லாந்துக்கு கடத்த முயன்ற மோசமான, போதையை ஏற்படுத்தும் ப்ளு பனிஷர் போதை மாத்திரைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையர் விடுத்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

”சென்னை விமான நிலையத்திலிருந்து நெதர்லாந்துக்கு வெளிநாட்டு தபால் அலுவலகம் மூலம் போதை மருந்துகள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்து. இந்தத் தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள், சுங்கத்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வெளிநாட்டு தபால் நிலையத்தில் தீவிரமான சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான ஒரு பார்சலை சோதனையிட முயன்றபோது அதில் திருமணப் பத்திரிகைகள் இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். ஆனால், பெட்டியைப் பிரித்துப் பார்த்தபோது நீல வண்ணத்தில் ஏராளமான மாத்திரைகள் முக்கோண வடிவில் காணப்பட்டன.

அந்த நீல நிற முக்கோண மாத்திரைகளை போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, எம்டிஎம்ஏ எனச் சொல்லப்படும் மெத்திலென்டியாக்ஸ், மெதாம்பெட்டாமைன் ஆகிய கலவை என்று தெரியவந்துள்ளது. இது மிகக் கொடிய போதைப் பொருளாகும்.

ப்ளூ பனிஷர் போதை மாத்திரைகள்

இதன் எடை மொத்தம் 384 கிராம்கள். சர்வதேச சந்தையில் ப்ளு பனிஷர் எனச் சொல்லப்படும் இந்த போதை மாத்திரையின் மதிப்பு ரூ.30 லட்சமாகும். சமீபகாலங்களில் சுங்கத்துறை நடத்திய போதைப்பொருள் தடுப்புச் சோதனையில் கைப்பற்றப்பட்ட அதிகபட்ச மதிப்புள்ள போதைப் பொருளாகும்.

பார்சல் குறிப்பிடப்பட்டு இருந்த முகவரியில் ரிஷிகேஷ், மைசூரு, ஜேஎஸ்எஸ் பல்கலைக்கழகம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு சோதனையிட்டு அவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரு, மைசூரு நகரங்களில் உள்ள இளைஞர்கள் மத்தியில் இந்த போதை மாத்திரை மிகவும் பிரபலம் என்று தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது”.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளு பனிஷர் என்றால் என்ன?

ப்ளு பனிஷர் எனச் சொல்லப்படும் இந்த மாத்திரை மெத்திலென்டியாக்ஸ், மெதாம்பெட்டாமைன் ஆகிய கலவையாகும். உச்சபட்ச போதையை வரவழைக்கும் இந்த மாத்திரைகளை இளைஞர்கள் பார்ட்டிகள், விழாக்களில் சாப்பிட்டு உற்சாகத்தில் திளைப்பார்கள். மற்ற போதை மாத்திரைகளைக் காட்டிலும் மூன்று மடங்கு சக்தி வாய்ந்தது இந்த ப்ளூ பனிஷர் மாத்திரைகளாகும். மருத்துவ ரீதியில் இது மனச்சிதைவு நோய் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது மரணம் சம்பவிக்கும். இங்கிலாந்தில் அதிகமான இளைஞர்கள் இந்த மாத்திரைகளை போதைக்காகச் சாப்பிட்டு ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/544041-mdma-tablet-seized-by-chennai-customs-at-foreign-post-office-one-arrested.html