கொரோனா : சென்னை ரங்கநாதன் தெரு கடைகளை 10 நாட்களுக்கு மூட அறிவுறுத்தல்- புரசை சரவணா ஸ்டோருக்கு சீல்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளையும் 10 நாட்களுக்கு மூடுவதற்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. முன்னதாக சென்னை புரசைவாக்கத்தில் அரசு அறிவுரையை மீறி திறந்த சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடி சீல் வைக்கப்பட்டது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் பிரதான வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் ஆகியவைகள் மட்டும் திறந்திருந்தன. இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் வேலுமணியுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின்னர், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளையும் 10 நாட்களுக்கு மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வெளிமாநிலங்களில் இருந்து ரயில்களில் வருகிற பயணிகளையும் பரிசோதித்து வருகிறோம். சென்னை விமான நிலையத்தில் இதுவரை 1.84 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2, 635 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் கண்காணிப்பில் இருக்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொடர்பான சோதனைகளில் ஏற்கனவே ஒருவருக்கு மட்டும்தான் பாஸிட்டிவ் என வந்தது. நேற்றைய சோதனையில் 38 பேருக்கும் நெகட்டிவ் ரிசல்ட்தான் வந்தது என்றார்.

புரசைவாக்கம்

இதனிடையே சென்னை புரசைவாகத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையை மாநகராட்சி அதிகாரிகள் பகல் 2 மணியளவில் மூட உத்தரவிட்டனர். ஆனால் மாலை 4 மணிக்கு சரவணா ஸ்டோர்ஸ் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் புரசைவாக்கம் கடையை மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-orders-to-close-all-shops-in-ranganathan-st-t-nagar-380015.html