சென்னை: தனிமையில் 639 பேர், என்னதான் நடக்கிறது, டெல்லி இளைஞர் கதை என்ன? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

கொரோனா வைரஸ் காரணமாகத் தமிழ்நாட்டில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார் என்ற செய்தி வெளியான நிலையில், டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்த மேலும் ஒருவருக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்கவர், சில நாட்களுக்கு முன் சென்னை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ரயில் நிலையம்(செண்ட்ரல்) வந்தடைந்துள்ளார். சென்னை வந்தடைந்த அந்த இளைஞர் தனது சொந்த வேலை விவரமாக ஊரில் சுற்றியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அந்த நபருக்கு இருமல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் தொடர்ந்து இருந்துள்ளது. இதனால், தனது நிலையைக் கண்டறிய ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். இந்த இளைஞருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால், மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட நபரைத் தனிமைப்படுத்தி ரத்த மாதிரிகள் உள்ளிட்டவற்றை எடுத்து அதை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நேற்று மாலை “கொரோனா தொற்று காரணமாகச் சென்னையில் 2வது நபர் பாதிக்கப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டார். இதுவரை தமிழ்நாட்டில் 222 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 82 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ்: விடாமல் உயரும் பாதிப்பு- அசராமல் போராடும் உலக நாடுகள்!

கடந்த 2 நாட்களில் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 984 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 659 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகச் சென்னையில் 232 பேர் நேற்று ஒரே நாளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று, மக்கள் தொடர்பான விவரம் குறித்துக் கேட்டறிந்து, அவர்களிடம் கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

இப்போதைய நேரத்தில் கொரோனா தொடர்பான பரிசோதனை மையங்களைத் தொடர்ந்து அரசு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் 500 ரத்த மாதிரிகளை ஒரே நேரத்தில் பரிசோதனைச் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/coronavirus-chennai-update-march-19th-more-than-6-hundred-kept-in-quarantine/articleshow/74703694.cms