ஆட்டிப் படைக்கும் கொரோனா பதட்டம்.. ஊருக்கு பறந்த பேச்சுலர்கள்… சென்னை மேன்ஷன்களின் நிலை என்ன..? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: இன்று மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 அமலுக்கு வருவதால், சென்னையில் தங்கி பணியாற்றி வந்த பெரும்பாலான இளைஞர்கள் நேற்று மாலை முதலே சொந்த ஊர்களுக்கு பறந்துவிட்டனர்.

சென்னை சோழிங்கநல்லூர், திருவல்லிக்கேணி, தி.நகர், மண்ணடி, அடையாறு, வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணற்ற மேன்ஷன்கள் இயங்கி வருகின்றன. அங்கு தங்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் தமிழகத்தில் 144 என்ற செய்தி வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில் ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு, பெருங்களத்தூர் உள்ளிட்ட பேருந்துநிலையங்களில் குவிந்துவிட்டனர். இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் பேருந்துகளில் இடம்பிடிப்பதற்காக அடிதடியும், வாக்குவாதமும் பயணிகளுக்கு இடையே ஏற்பட்டது.

சரி எதனால் இப்படி பேச்சுலர்கள் ஊருக்கு படையெடுத்தார்கள், அவர்கள் தங்கியுள்ள மேன்ஷன்களில் இருந்து காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்களா என்பது பற்றி நாம் விசாரித்தோம். அதில், யாரையும் மேன்ஷன்களை விட்டு வெளியேறுமாறு நிர்வாகத்தினர் அறிவுறுத்தவில்லை என்பதும், அறையை காலி செய்யுமாறு யாரிடமும் எந்த மேன்ஷன் உரிமையாளரும் கூறவில்லை என்பதும் தெரியவந்தது. இருப்பினும் சோழிங்கநல்லூர் பகுதியில் மட்டும் குறிப்பிட்ட ஒரு சில பி.ஜி.ஹாஸ்டல்கள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றபடி சென்னையின் மற்ற பகுதிகளில் இயங்கும் மேன்ஷன்கள் இதுவரை மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுலர்கள் சென்னையை காலி செய்து சொந்த ஊர்களுக்கு சென்றதற்கு பிரதான காரணமாக கூறப்படுவது உணவும், செலவும்.. சென்னையில் ஹோட்டல்கள் திறந்திருக்கலாம் என அரசு விதிவிலக்கு கொடுத்திருந்தாலும் பிரபல ஹோட்டல்கள் மட்டுமே செயல்படும் எனத் தெரிகிறது. மற்றபடி மெஸ், சிறிய உணவகங்கள் எல்லாம் தற்போதைய சூழலில் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சரி அது என்ன உணவும், செலவும் என கேட்கிறீர்களா, பெரிய ஹோட்டல்களில் ஒரு சாப்பாடு விலை குறைந்தபட்சம் ரூ.110-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் இட்லி ஒரு செட் குறைந்தபட்சம் ரூ.40-க்கும், தோசை ஒன்று குறைந்தபட்சம் ரூ.75-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக குறைந்தவிலையில் தாங்கள் தங்கியுள்ள தெருக்களிலோ, பகுதிகளிலோ இயங்கி வந்த மெஸ் போன்ற உணவகங்களில் தான் பேச்சுலர்கள் சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில் 144 அமலில் உள்ள இன்னும் ஒரு வாரகாலத்திற்கு அதிக விலை கொடுத்து பெரிய ஹோட்டல்களில் உணவு வாங்கி சாப்பிட முடியாது என்பதாலும், 10*8 என்ற அளவுக்கு இருக்கும் மேன்ஷன்களின் சிறிய அறைகளில் முடங்கிகிடக்க வேண்டும் என்பதாலும், எல்லாவற்றையும் விட பெற்றோர் பதறித்துடித்து ஊருக்கு வந்துவிடுமாறு கேட்டுக்கொண்டதாலும் நேற்றைய தினம் பெருமளவில் பேச்சுலர்கள் சென்னையை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் அவர்களை குறை சொல்வதற்குமில்லை, பாராட்டுவதற்கும் இல்லை.

தமிழக அரசு தான் திட்டமிட்டு முன்கூட்டியே அதிகப் பேருந்துகளை பேருந்துநிலையங்களுக்கு கொண்டுவந்துவிட்டு 144 அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்ய தவறியதால் நேற்றைய தினம் மாலை முதல் ஒருவித பதற்றம் பற்றிக்கொண்டது. இதில் கொடுமை என்னவென்றால் இரண்டு சக்கர வாகனங்களிலேயே சென்னை, ஒசூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மூன்று இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தான். மேலும், இன்றும் சென்னையில் இருந்து அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இரண்டு சக்கர வாகனங்களிலேயே மாலை 6 மணிக்குள் ஊர் எல்லையை அடைவோம் என இலக்கு நிர்ணயித்து பறந்து வருகின்றனர். இது ரேஸ் நடைபெறுவதற்கு சமமாக கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திசைமாறிச் செல்வது உண்மையிலேயே கவலையளிக்க செய்வதாக தான் உள்ளது. தற்போதைய சூழலில் மக்களுக்கு இருக்கும் முக்கிய கவலைகளில் ஒன்று, வரும் மாதங்களில் வங்கிக்கடன், இ.எம்.ஐ. தொகைகளை எப்படி செலுத்தப்போகிறோம் என்பது தான். ஆகையால் இதனை மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக கவனத்தில் கொண்டு கடனை திருப்பிச்செலுத்த குறைந்தது இரண்டு மாதங்கள் கால அவகாசம் தர வேண்டும் என்பது தான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/bachelors-who-went-to-hometown-what-is-the-status-of-chennai-mansions-380715.html