நான் கொரோனா வைரஸ்.. உங்கள் வண்டியில் ஏறவா?.. வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா வைரஸ் வடிவிலான தலைக்கவசம் அணிந்து வில்லிவாக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் காவல் ஆய்வாளர் ராஜேஷ் பாபு.

image

வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு – வைரல் வீடியோ

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயானது தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசும், சுகாதாரத் துறை, காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்,நோய் தொற்றின் தீவிரம் குறித்த விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனா தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் நாடு முழுவதும் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில அரசு

அதே போல மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்நிலையிலும் நோயின் தீவிரம் தெரியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே சுற்றி கொண்டுள்ளனர். அவர்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஷ்பாபு முயற்சி எடுத்துள்ளார்.

சமூக விலகல்

அதாவது கொரோனா வைரஸ் வடிவில் தலைக்கவசம் அணிந்து கொண்டு பாடி மேம்பாலத்தில் நின்று கொண்டு அந்த பகுதி வழியாக தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளை மறித்து நோயின் தீவிரம் குறித்தும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என எச்சரித்தார். அதே போல மக்கள் அதிகம் கூடும் இடமான வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கடைகளுக்கு சென்று சமூக விலகல் குறித்தும், முகக் கவசம் இல்லாமல் வெளியே சுற்றக் கூடாது எனவும் எச்சரித்தார்.

நடவடிக்கை

மேலும் அவர் வாகன ஓட்டிகளிடம் நான் யார் தெரியுமா, கொரோனா. நான் உங்கள் வாகனத்தில் ஏறட்டுமா என கேட்டார். இது போல் நூதன முறையில் காவல் ஆய்வாளர் மேற்கொண்ட விழிப்புணர்வு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இது குறித்து ராஜேஷ்குமார் கூறுகையில் இந்த முறையிலான விழிப்புணர்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க நாங்கள் போதுமான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம்.

டிசைன்

எனினும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கொரோனா ஹெல்மெட் மூலம் மக்களுக்கு அந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்தோம். இது நன்றாக வந்துள்ளது. எனது ஹெல்மெட்டை பார்த்து பயந்த குழந்தைகள் வீடுகளுக்கு சென்றுவிடலாம் என பெற்றோரிடம் கூறினர். இந்த ஹெல்மெட்டை சுமன் என்றவர் டிசைன் செய்தார் என்றார்.

பேப்பர்கள்

இதுகுறித்து சுமன் கூறுகையில் நான் ஏற்கெனவே கொரோனாவுக்கு எதிராக பிளக்கார்டுகளை போலீஸிடம் ஒப்படைத்துள்ளேன். ஒரு நாள் உடைந்த ஹெல்மெட்டை வைத்து பேப்பர்களை வைத்து இது போல் ஒரு கொரோனா ஹெல்மெட்டை செய்யலாம் என்ற யோசனையை தெரிவித்தேன். அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். நான் செய்து கொடுத்தேன் என்றார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-uses-coronavirus-helmet-and-creates-awareness-of-the-disease-381238.html