முதல்வர், அமைச்சர்கள் மீது ஹலோ ஆப்பில் அவதூறு: சென்னை மென்பொறியாளர் கைது – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்களை கேவலமாகச் சித்தரித்தும், எழுதியும் ஹலோ ஆப்பில் பதிவிட்டதாக சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் மீது அதிமுக நிர்வாகி புகார் அளித்தார். அதன்பேரில் கோவை போலீஸார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கோவை கரும்புக்கடையில் வசிப்பவர் ரியாஸ்கான் (22). இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணைச் செயலாளராகப் பதவி வகிக்கிறார். இவர் நேற்று கோவை சரவணம்பட்டி போலீஸில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “ தகவல் தொழில்நுட்ப நிர்வாகி என்கிற முறையில் சமூக வலைதளங்கள், முகநூல், ட்விட்டர், ஹலோ ஆப் உள்ளிட்டவற்றில் மாற்றுக்கட்சியினர் பதிவுகளை ஆராய்வது வழக்கம். அவ்வாறு பார்க்கும்போது கடந்த சில நாட்களாக ஹலோ ஆப்பில் கறுப்புக்குதிரை என்ற பெயரில் ஒரு நபர் தமிழக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரை அவர்கள் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும் வண்ணம் தரக்குறைவாகப் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த எனது கட்சிக்காரர்கள் கொந்தளித்தனர். நான் அவர்களை அமைதிப்படுத்தினேன். கரோனா தாக்கம் அதிகம் இருக்கும் நேரத்தில், தொற்றுக்கெதிராக பாடுபட்டு வரும் கட்சித் தலைவர்களை அவதூறு செய்தவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என முடிவு செய்து வந்தேன்.

கட்சியினர் இடையே கொந்தளிப்பையும், பொதுமக்களிடையே பீதியையும் வன்முறையையும் கிளப்பும் வண்ணம் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வரும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

புகாரைப் பெற்ற போலீஸார் ஐபிசி பிரிவு 504, 506(1), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஹலோ ஆப்பில் பதிவிட்ட சம்பந்தப்பட்ட பதிவின் ஐபி முகவரியை ஆராய்ந்தபோது அந்த நபர் சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் மென்பொறியாளர் சுதர்சன் (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை வந்த தனிப்படை போலீஸார் சுதர்சனைக் கைது செய்து கோவை அழைத்துச் சென்றனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/548227-chennai-youth-arrested-for-defamation.html