சென்னை: இவ்ளோ பாதிப்பா.. அலற வைக்கும் ரிப்போர்ட்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 199ஆக அதிகரித்துள்ளது.

ராயபுரம் 63, திருவிக நகர் 26, தண்டையார்பேட்டை 17, மாதவரம் 3, திருவொற்றியூர் 4, அண்ணாநகர் 22, தேனாம்பேட்டை 14, கோடம்பாக்கம் 22, வளசரவாக்கம் 4, ஆலந்தூர் 2, அடையாறு 6 பெருங்குடி 6, சோழிங்கநல்லூர் 2 என பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மாநிலத்திலேயே அதிக பாதிப்பு உள்ள மாவட்டமாக இருக்கும் சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாக வீடு வீடாக சென்று சோதனை செய்து வருகின்றனர். இதுவரை சுமார் ஒரு கோடி பேரை சோதனை செய்துள்ள ஊழியர்கள் பல்வேறு தகவல்களை கணக்கெடுத்து வருகின்றனர்.

சென்னை நிலவரம்

காய்ச்சல், சளி இருக்கிறதா, முதியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், கர்ப்பிணி பெண்கள் எத்தனை பேர் உள்ளனர் என பல விவரங்களை கேட்டுப் பெறுகின்றனர். இந்நிலையில் சென்னையில் 3 ஆயிரத்து 036 பேருக்கு காய்ச்சல், சளி என கொரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களில் 775 பேர் திவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா: தமிழ்நாட்டின் தற்போதயை நிலை இதுதான்!

சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டாலும், ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழ்நாடு வந்தபின் நடைபெறவுள்ள விரைவு சோதனைகளில் மேலும் பாதிப்பு நிலவரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாதிப்பு அதிகமாக உள்ள ராயபுரம், திருவிக நகர் பகுதிகளில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேவர கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு ஒருவர் மட்டுமே அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியில் வரவேண்டும். பக்கத்து வீட்டார்களிடம் பேசக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் பெறப்படும் குப்பைகள் வழக்கமாக கொண்டு செல்லும் இடத்திற்கு மாறாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்படுகின்றன.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/coronavirus-cases-increased-in-chennai/articleshow/75115572.cms