சென்னையில் முகக்கவசம் கட்டாயம்: மீறினால் நடவடிக்கை என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில்தான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று வரை 1173 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமூக பரவல் நிலைக்கு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சென்று விடக்கூடாது என தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், ‘‘வீட்டை விட்டு வெளியே செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் சென்றால், வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் வெளியே செல்வதற்கான சிறப்பு அனுமதி சீட்டு போன்றவை ரத்து செய்யப்படும்’’ எனத் தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: https://www.maalaimalar.com/news/topnews/2020/04/13213450/1415468/Creater-chennai-public-adviced-compulsory-Face-mask.vpf