கொரோனாவால் உலகை விட்டு செல்பவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் அனுப்பி வைப்போம்.. சென்னை மாநகராட்சி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனாவால் இறந்தவர்களின் உடலிலிருந்து எந்தவொரு நோய்த் தொற்றும் பரவாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் துறை மருத்துவருக்கு கொரோனா ஏற்பட்டு அவர் நேற்று உயிரிழந்தார். அவரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய உடல் கொண்டு வரப்பட்ட போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர். அந்த வாகன டிரைவரையும் தாக்கினர்.

இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த 20 பேரை கைது செய்தனர்.

imageகொரோனாவால் இறந்த டாக்டர்.. அடக்கம் செய்ய விடாமல் தாக்கிய மக்கள்.. நடந்தது என்ன? உடனிருந்தவர் பேட்டி

துரதிருஷ்டம்

இந்த நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் இவ்வுலகை விட்டு விடைபெற்று செல்வதென்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த தொற்றுநோயால் சில நல்ல மனிதர்களை நாம் இழக்க நேரிடுவது கடினமான ஒரு நிகழ்வாகும்.

வழிகாட்டுதல்

நாம் வாழும் இவ்வுலகில் அவர்களும் ஒரு பகுதியே. சக மனிதர்களாகிய அவர்களைத் தகுந்த மரியாதையுடன் இங்கிருந்து அனுப்பி வைப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். கோவிட் 19 காரணமாக இறக்கும் நபர்களை தகனம் அல்லது அடக்கம் செய்ய உலக சுகாதார அமைப்பு அளித்திருக்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தெளிவான நடைமுறை பின்பற்றப்படுகிறது.

கவனம்

சடலத்தை கவனமாகவும் மரியாதைக்குரிய விதத்திலும் கையாளவும் சரியான முறையில் தகனம் செய்யவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி அவர்கள் உடல்களை கவனமாக தகனம் செய்ய எல்லா விதிமுறைகளையும் பின்பற்றுகிறது.

பாதுகாப்பு

இறந்த நபர்களின் சடலத்திலிருந்து எந்தவொரு நோய்ப் பரவலையும் பற்றி மக்கள் கவலைப்படவோ பயப்படவோ தேவையில்லை. நாங்கள் அதனை பாதுகாப்பான முறையில் கையாளுகிறோம். இந்த விஷயத்தில் நம் சமூகத்திற்கான முழு பாதுகாப்பை உங்களுக்கு உறுதியளிக்கிறோம். நம் உலகத்திலிருந்து செல்பவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் அனுப்பி வைப்போம்! என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/no-disease-will-spread-from-deceased-bodies-says-chennai-corporation-383150.html