Chennai Lockdown: சென்னை, மதுரை, கோவையில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு!! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னை மதுரை கோவையில் முழுமையான ஊரடங்கு வரும் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு என்ற உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே சேலத்தில் இன்று மதியம் முதல் திங்கள் கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது, சென்னை, மதுரை, கோவைக்கும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

சென்னை மதுரை கோவையில் முழுமையான ஊரடங்கு வரும் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு என்ற உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஞாயிறு காலை 6 மணி முதல், புதன் கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

சேலம், திருப்பூர் மாவட்டங்களில் முழுமையாக 26ஆம் தேதி ஞாயிறு காலை 6 மணி முதல், 28ஆம் தேதி செவ்வாய் கிழமை இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும்:

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள்,மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்

அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய், மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

ஊரடங்கு அறிக்கை

இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும், அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்

அம்மா உணவகங்கள், ஏடிஎம் தானியங்கி நிலையங்கள் செயல்படும்
உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து பெறப்படும் உணவுகளுக்கு அனுமதி அளிக்கப்படும்

முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்

ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்

ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்

கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். அதேபோல், காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கொண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

ஏன் முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கிராமங்களை விட, நகரங்களில் இன்னும் ஊரடங்கை இன்னும் முறையாக மக்கள் பயன்படுத்தவில்லை. இதனால், கொரோனா தொற்று நகரங்களில் மட்டும் அதிகரித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்கச் செல்கிறோம் என்ற காரணத்தைக் காட்டி வெளியே சென்று கொண்டுள்ளனர்.

கிராமங்களில் மக்களே தங்களது எல்லைக்குள் ஒரு கட்டுப்பாட்டை விதித்து ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து வருகின்றனர். நகரங்களில் மக்கள் எவ்வளவு கூறினாலும், விதிகளை மீறுவது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.

அரசின் கூற்றின்படி இன்னும் நாம் தொற்றின் இரண்டாவது நிலையில் இருக்கிறோம். மூன்றாம் நிலைக்குள் செல்லாமல் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அரசு முயற்சித்து வருகிறது.

தமிழகம் உள்பட நாட்டின் மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால், கொரோனா வீரியம் குறைந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. இந்த நிலையில் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/complete-lock-down-in-chennai-coimbatore-madurai-for-4-days-from-26th-april/articleshow/75345685.cms