ஊரடங்கு: சென்னை தவிர பிற மாவட்டங்களில் தளர்வு, தடை குறித்த விவரம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை தவிர பிற மாவட்டங்களில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்த இடங்களில் எவற்றுக்குத் தளர்வு, எவை செயல்படத் தடை என்பது குறித்த முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று நடந்த அமைச்சரவையின் நீண்ட கூட்டத்திற்குப் பின்னர் தமிழகத்தில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ண மாவட்டங்களில் அமல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதில் சென்னை மாவட்டத்திற்கு தனியாக சில முடிவுகளும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்கள் குறித்தும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பொதுவான தடை சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மே 17 வரையிலும் நீட்டிக்கப்படுகிறது. அதுகுறித்து தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதுகுறித்த விவரம்:

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர – (Except Containment Zones),) கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

* 50 சதவீதப் பணியாளர்களைக் கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றம் பேரூராட்சிப் பகுதிகளில், உள்ள அனைத்துத் தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட) செயல்பட அனுமதிக்கப்படும்.

* 15,000-க்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.

* SEZ, EOU தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம், நகரம்) 50 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகரப் பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.

* நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவிகிதப் பணியாளர்களைப் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

* மின்னணு வன்பொருள் ((Hardware Manufactures) உற்பத்தி 50 சதவிகிதப் பணியாளர்களைப் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

* ·கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நுற்பாலைகள் ((Spinning Mills)) (ஷிஃப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்) 50 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

* நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 சதவிகிதப் பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

* தகவல் தொழில்நுட்பம் ((IT & ITeS): 50 சதவிகிதப் பணியாளர்கள் குறைந்தபட்சம் 20 நபர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

* நகர்ப்புறங்களில் கட்டுமானப் பணிகள்: பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும்; பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.

* அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்.

* பிளம்பர், எலெக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர்.

* மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்புத் தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

* அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், மின்சாதன விற்பனைக் கடைகள்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவிதத் தடையும் இல்லை.

* மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும்.

* உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.

* நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள் (மால்கள்) மற்றும் வணிக வளாகங்கள் (மார்க்கெட் காம்ப்ளக்ஸ்கள்) தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/552532-curfew-details-on-relaxation-and-ban-in-districts-other-than-chennai.html