சென்னை டூ ரத்னகிரி… 2400 கி.மீ. பயணம்… கனிமொழிக்காக களத்தில் இறங்கிய மகளிரணி நிர்வாகிகள் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் பணியாற்றி வரும் நிலையில், அவரது தந்தை இறந்ததால் சொந்த ஊரான ரத்னகிரிக்கு செல்ல திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி உதவியுள்ளார்.

மனிதநேயத்துடன் கனிமொழி மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு மஹாராஷ்டிரா எம்.பி.யும், சரத்பவார் மகளுமான சுப்ரியா சுலே நன்றி தெரிவித்துள்ளார்.

இதனிடையே தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்ற இளம்பெண்ணுக்கு துணையாக திமுக மகளிரணி நிர்வாகிகள் இருவர் உடன் பயணித்தனர்.

imageநாடு இப்போது இருக்கும் சூழலில்… நீட் தேர்வை நடத்தக்கூடாது… மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மாரடைப்பால் மரணம்

திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்றக் குழு துணைத்தலைவருமான கனிமொழியை, மகாராஷ்டிரா மாநில எம்.பியும், சரத்பவார் மகளுமான சுப்ரியா கடந்த மாதம் 28 ம் தேதி செவ்வாய்கிழமை அலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மகாராஷ்டிரா மாநிலம், ரத்தினகிரி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண் யுவாந்தி அணில் சாகேத் என்பவர், சென்னையிலுள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அவருடைய தகப்பனார் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாகவும், அவரை உடனடியாக ஊருக்கு அனுப்பி வைக்க உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

துரித நடவடிக்கை

யுவாந்தி அணில் சாகேத் பணிபுரியும் நிறுவனத்தோடு கனிமொழி தொடர்பு கொண்டு பேசியதில், அப்பெண்ணோடு யாராவது ஒருவர் உடன் சென்றால், அனுப்பி வைக்கிறோம் எனப் பதிலளித்திருக்கிறார்கள். அதற்கு ஒப்புக்கொண்ட கனிமொழி உடனடியாக அந்த இளம்பெண்ணை ஊருக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் இறங்கினார். இதையடுத்து இந்த தகவலை திமுக மகளிரணி சமூக வலைதளக்குழுவில் கனிமொழி பகிர்ந்தார்.

அனுமதி கடிதம்

இதைப் பார்த்த சோழிங்கநல்லூர் கிழக்குப்பகுதி திமுக மகளிரணி நிர்வாகி கலைச்செல்வியும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகி பொன்மணியும், தந்தையை இழந்து நிற்கும் இளம் பெண்ணோடு மகாராஷ்டிரா செல்ல முன் வந்தனர். இதையடுத்து அந்தப் பெண்ணோடு திமுக மகளிரணி நிர்வாகிகள் இருவருமாக, மூன்று பெண்களும் செல்வதற்கு முறையான அனுமதியை இரவு 11 மணிக்குப் பெற்று, அன்றைய தினம் இரவு 2 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார் கனிமொழி.

நெகிழ்ச்சி

நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு மறுநாள் 29 புதன்கிழமை இரவு 11.40 க்கு மூன்று பெண்களும் மகாராஷ்டிராவுக்குப் போய் சேர்ந்தனர். அந்தப் பெண்ணை அவருடைய வீட்டில் விட்டுவிட்டு மகளிரணி நிர்வாகிகள் இருவரும், மறுநாள் 30 வியாழன் மாலை 6 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தனர்.

2400 கிலோமீட்டர் பயணித்து, உடனிருந்து உதவிய மகளிரணியினரை கனிமொழி அழைத்து பாராட்டினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும்,சரத்பவார் மகள் சுப்ரியாவும் கனிமொழியின் இந்த மனிதநேயமிக்க உதவியை எண்ணி நெகிழந்து நன்றி கூறினர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-mp-helped-the-maharashtra-young-lady-384625.html