சென்னை கண்ணகி நகரில் கணக்கை தொடங்கிய கொரோனா… கட்டுக்கடங்காத வேகத்தில் பரவல்..! – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் சராசரியாக 500-ஐ தாண்டிய வண்ணம் உள்ளது. கோயம்போடு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் மூலம் பரவியதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று புதியதாக 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், ராயபுரம், திரு.வி.க. நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக  உள்ளது. 

இந்நிலையில், சோழிங்கநல்லுார் மண்டலத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை, இரண்டு பேருக்கு தான் கொரோனா பாதித்தது. கோயம்பேடு மார்க்கெட் பாதிப்பால், ஒரு மாதத்திற்கு பின், பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது. இதுவரை, மண்டலத்தில், 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது கண்ணகி நகரில் புதியதாக 23 பேருக்கு கெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக, கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 30,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இரு குடியிருப்பில், பெரும்பாலான வீடுகள், 170, 200 சதுர அடி பரப்பளவு கொண்டவை. வீடுகளில், சமூக இடைவெளி கடைப்பிடிக்க, போதுமான வசதி இல்லாததால், தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்த பகுதியில், சுகாதார நடவடிக்கையை தீவிரப்படுத்தி, மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 

Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.

Last Updated 12, May 2020, 10:42 AM

Source: https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chennai-kannagi-nagar-23-people-positive-case-qa7d4r