சிதம்பரம் டூ சென்னை- நடந்தே புறப்பட்ட வாய்பேச முடியாத பெண்..பாதுகாப்பாக அனுப்பி வைத்த புதுவை போலீஸ் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்
Puducherry

புதுச்சேரி: சிதம்பரத்தில் இருந்து நடந்தே சென்னைக்கு புறப்பட்ட வாய்பேச முடியாத பெண்ணுக்கு புதுச்சேரி போலீஸார் உணவளித்து லாரி மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாபேட்டையில் வசித்து வருபவர் சிவராணி. வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணான இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 18 ஆம் தேதி சிவராணி சிதம்பரத்துக்கு சித்தாள் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் சென்னைக்கு திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளார்.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், வாய்பேச முடியாமலும், கையில் பணம் இல்லாததாலும் சென்னைக்கு எப்படி செல்வது எனத் தெரியாமல் தவித்துள்ளார். பின்னர் நடந்தே சென்னைக்கு செல்ல முடிவெடுத்த அவர் நடக்க தொடங்கினார். பொடிநடையாக வந்த சிவராணி நேற்று புதுச்சேரிக்கு வந்தார்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலை சித்தானந்தா கோயில் அருகில் கரோனா பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மணி, குப்புசாமி, ராஜ், மைக்கேல் அருண் ஆகியோர் அவரை கண்டு விசாரித்தனர். அப்போது அவர் வாய்பேச முடியாதவர் என அறிந்து கொண்டனர்.

மேலும் அவருடைய சைகையை வைத்து சாப்பிடவில்லை எனவும் தெரிந்து கொண்டனர். உடனே சிவராணிக்கு உணவு கொடுத்த போலீஸார், அவர் கையில் வைத்திருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது சிவராணி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்ததும், கடந்த 4 நாட்களாக அவருடைய உறவினர்கள் அவரை தேடிவந்ததும் தெரியவந்தது.

imageபுதுவையில் அதிகரிக்கும் கொரோனா… சமூகப் பரவலா? மக்கள் எச்சரிக்கையாக இருக்க சுகாதாரத்துறை வார்னிங்

இதையடுத்து லாஸ்பேட்டை காவல்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீஸார் இரண்டு மணிநேரமாக அந்த வழியாக சென்னை சென்ற வாகனங்களில் சிவராணியை அழைத்துச்செல்ல உதவி கேட்டனர். ஆனால் பெரும்பாலானோர் அழைத்துச் செல்ல முன்வராத நிலையில், தமிழ் என்ற கன்டெய்னர் லாரி ஓட்டுநர் சென்னை அழைத்து செல்ல சம்மதித்தார். உடனே போலீஸார் சிவராணிக்கு செலவுக்கு கையில் ரூ.500 பணம் கொடுத்து, அவர் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் பாதுகாப்புடன் சென்று சேர்ந்ததையும் போலீஸார் உறுதி செய்துகொண்டனர். கொரோனா பணிசுமைக்கு நடுவிலும் போலீசாரின் இத்தகைய பணிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-police-who-helped-women-to-travel-chennai-386506.html