சென்னையில் தொடரும் பரபரப்பு; கொரோனா பாதித்த மற்றொரு நபர் தற்கொலை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த மற்றொரு நபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  இதுவரை 17 ஆயிரத்து 728 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.  9 ஆயிரத்து 342 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  127 பேர் பலியாகி உள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் அச்சத்தில் தற்கொலை செய்வது அதிகரித்து உள்ளது.  சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியை சேர்ந்த 50 வயதான ஒருவருக்கு கடந்த 25ந்தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனை அடுத்து அவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அந்த வார்டில் உள்ள கழிவறைக்கு சென்ற அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதனால் மருத்துவமனையில் இருந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு தற்கொலை நடந்துள்ளது.  சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 57 வயதான நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதனால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.  அடுத்தடுத்து 2 நாட்களில் கொரோனா பாதித்தவர்கள் மருத்துவமனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/27101956/Continuing-sensation-in-Chennai-Another-person-affected.vpf