பொது முடக்கத்தில் தளர்வு கூடாது: சென்னைக்கு வந்த சோதனை! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னை: நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், அதிலிருந்து சென்னைக்கு தளர்வு அளிக்கக்கூடாது என மருத்துவ நிபுணர் குழு முதல்வர் பழனிசாமிக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக இரு மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் அதன்பின்னர் பொது முடக்கத்தை நீட்டிப்பதா, கைவிடுவதா, சில இடங்களைத் தவிர்த்து பல இடங்களில் தளர்வுகளை ஏற்படுத்துவதா என மாநில அரசுகள் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான நெறிமுறைகளை வகுப்பது, கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது, பொது முடக்கத்தை நீட்டிப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமியுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.

நாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு?

மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய புதிய உத்திகள், மருத்துவ சிகிச்சை குறித்த வழிமுறைகள் / நெறிமுறைகள், இறப்புகளை தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் குறிப்பாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு அறிக்கை

இந்த நிலையில், தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக வருகிற 30ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், சென்னைக்கு பொதுமுடக்கத்தில் தளர்வு அளிக்கக்கூடாது என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/medical-experts-recommends-tn-government-not-to-relax-lockdown-for-chennai/articleshow/76008152.cms