சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 4-வது கட்டமாக வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வேகமாக பரவி வந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது. சலூன் கடைகள் உள்ளிட்ட மற்ற கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு வந்த நிலையில் சலூன் கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

இதையொட்டி முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களுக்கும் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் சென்னையை தவிர்த்து கிராமப்பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை மட்டும் திறந்து கொள்ள அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கத்தின் தலைவர் முனுசாமி தாக்கல் செய்த மனுவில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சலூன் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மாதம் ரூ.15 ஆயிரம் வரை வருவாய் ஈட்டி வந்த 10 லட்சம் முடித்திருத்தும் தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளைத் திறக்க அனுமதியளித்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ள முடித்திருத்தும் தொழிலாளர்கள் பட்டினிச்சாவால் பாதிக்கப்படும் முன் சலூன் கடைகளைத் திறக்க உத்தரவிட வேண்டும்.

கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ள முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சலூன் கடைகளை திறக்க கோரிய வழக்கு, ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/05/28150835/Steps-to-open-saloon-shops-in-Chennai.vpf