சென்னைக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து தினம் 500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் கொள்முதல் – அரசு – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால், கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் 500 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் கொள்முதல் செய்து, சென்னை நகர மக்களுக்கு விற்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த மனுவுக்கு பதிலளித்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஊரடங்கு அறிவித்ததும், தோட்டக்கலை துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து, காய்கறி, பழங்களை அதிகளவில் கொள்முதல் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகள் தமிழகம் வருமா? விவசாயிகளுக்கு தமிழக அரசு ஆலோசனை

10,100 வாகனங்கள் மூலம் 6 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும், உழவர் சந்தைகள் மூலம் 1,400 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டதை தொடர்ந்து கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் 500 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் கொள்முதல் செய்து, சென்னை நகர மக்களுக்கு விற்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளை பாதுகாக்க, குளிர்பதன கிடங்குகளுக்கான வாடகை மே 31 வரை விலக்களிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

காய்கறி, பழங்களை பதப்படுத்தவும், வினியோகம் செய்யவும், 482 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் உணவு சங்கிலி மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கள நிலவரத்தை ஆய்வு செய்து சலூன் கடை திறக்க நடவடிக்கை – தமிழக அரசு உறுதி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஊரடங்கு காலத்தில் மட்டும் 37 ஆயிரத்து 635 விவசாயிகளிடமிருந்து 2 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 522 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 18 ஆம் தேதிக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த அமர்வு தள்ளிவைத்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/vegetables-and-fruits-madras-high-court-chennai-tn-government-194763/