சரக்கு வாங்க இப்படியொரு பயணமா? அபாயம் உணராத மதுப் பிரியர்கள்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் மதுபான விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது.

மதுபானக் கடைகள் திறக்கவில்லை என்பதற்காக பொறுத்திருக்காமல் வித்தியாசமான பல வழிகளைக் கண்டறிந்து மது பானங்களை வாங்கிவருகின்றனர் சென்னை மதுப்பிரியர்கள்.

இரு சக்கர வாகனம், கார் ஆகியவற்றில் அருகிலுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மதுப் பிரியர்கள் சென்று மது பானம் வாங்கிவருவதும், சில நேரங்களில் காவல்துறையினரிடம் மாட்டிக்கொள்வதும் நடைபெறுகிறது. இந்நிலையில் வட சென்னை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மதுப் பிரியர்கள் வேறு ரூட்டில் சென்று மதுபானங்களை அள்ளி வருகின்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு!

சாலை மார்க்கமாக சென்றால் காவல் துறை பிடிக்கும் என்பதால் காசிமேடு, தண்டையார் பேட்டை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் கட்டுமரம் மூலம் கடல் மார்க்கமாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி வருகின்றனர்.

ஒரு முறை சென்று வர கட்டுமர உரிமையாளர்கள் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.

மதுபானத்திற்காக துணிகர பயணம் மேற்கொண்டாலும், இதன்மூலம் பெரும் ஆபத்தை அவர்கள் உணராமல் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

4 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை: மருத்துவர்கள் குழு!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து மீனவர்கள் கடல் மார்க்கமாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு சென்று வருவதன் மூலம் அங்கும் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் இது குறித்து காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/north-madras-guys-buy-liquor-in-thiruvallur-district-travelling-by-sea/articleshow/76107185.cms