பதற வைக்கும் சென்னை.. பரிசோதிக்கும் 5ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. உஷார் மக்களே! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோரில் ஐந்தில் ஒருவருக்கு, பாதிப்பு இருப்பது உறுதியாகும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மொத்த இந்தியாவிலும், கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்று தமிழகம். அதிலும் தலைநகரம் சென்னையில்தான் நிலைமை மிக மோசமாக உள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 585 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

imageசென்னையில் கட்டுக்குள் வராத கொரோனா… 2 மாதங்களில் 3 முறை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர்

சென்னை பலி எண்ணிக்கை

இதுவரை 150 நோயாளிகள் இந்த நோயால் சென்னையில் பலியாகி உள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் கொரோனா வைரஸ் என்பது சமூக பரவல் நிலையை அடையவில்லை என்று மருத்துவ நிபுணர் குழு இரு தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியின் போது மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

ஐந்தில் ஒருவர்

அதேநேரம் புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும்போது சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவருகிறது. சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது கொரோனா வைரஸை ஒழிக்க அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றி மக்கள் செயல்பட்டால்தான் சென்னையில் அதிக அளவில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். மேலும் கொரோனா பரவலை தடுக்கக் கூடிய நடவடிக்கையாக, சோதனையின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். சென்னையில் மட்டும் தினமும் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தினமும் 4000 பேருக்கு சோதனை

அதேநேரம் கடந்த மூன்று நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை என்பது தினமும் 800க்கும் மேல் பதிவாகி வருகிறது. இன்றும்கூட பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 809 என்ற அளவில் இருந்தது. தினமும் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை.. அதில் 800 பேருக்கும் மேல் வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று எடுத்துக்கொண்டால், சென்னையில் பரிசோதனை செய்யப்பட்டோரில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இது மிகவும் வேகமான பரவல் என்பது தான் இதில் கவலை அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கிறது.

முன்னெச்சரிக்கை அவசியம்

எனவே சென்னை மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகுவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும். சமூகத்தில் இந்த அளவுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதை அவர்கள் உணர்ந்து, தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/every-single-person-out-of-5-persons-in-chennai-having-corona-virus-387253.html