ரத்தான ரெயில்களின் கட்டணத்தை திரும்பப்பெற சென்னையில் ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் திறப்பு பயணிகள் மகிழ்ச்சி – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை ரெயில்வே கோட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற 19 ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன. டிக்கெட் கட்டணத்தை பயணிகள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.

சென்னை,

ஊரடங்கு காலத்தில் பல்வேறு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள், ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற சென்னை கோட்டத்தில் 19 ரெயில் நிலையங்களில் கவுண்ட்டர்கள் 5-ந்தேதி (நேற்று) முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல், எழும்பூர், சென்னை கடற்கரை, மயிலாப்பூர், மாம்பலம், பரங்கிமலை, தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜா சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய 19 ரெயில் நிலையங்களில் நேற்று டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன.

முதல்நாளான நேற்று கடந்த மார்ச் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த மார்ச் 31-ந்தேதி வரை ரெயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர்களுக்கு வந்திருந்தனர்.

முக கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கிருமிநாசினி தெளித்த பிறகு முறையாக சமூக இடைவெளியை பயன்படுத்தி பயணிகள் கவுண்ட்டர்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான கட்டணத்தை மகிழ்ச்சியுடன் பயணிகள் பெற்று செல்வதை பார்க்க முடிந்தது.

Source: https://www.dailythanthi.com/News/Districts/2020/06/06041651/in-Chennai-Opening-of-Railway-Ticket-Counters-The.vpf