சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு..? இ-பாஸ் நிறுத்தம்? அதிரடி காட்ட தயாராகும் அரசு..! – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்றைய  நிலவரப்படி தமிழகத்தில் 33,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 17,527 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 286ஆக இருக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் கணிசமாக சென்னையிலேயே நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தேசிய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. 

சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் வடசென்னையின் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை  4023ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டை பாதிப்பு 3000 தாண்டியது.  கோடம்பாக்கம், திரு.வி.க நகர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் 2,000-த்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக மணலியில் 328 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் பாதிப்பு அதிகம் இருக்கும் சூழலில் வரும் நாள்களில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து சென்னையை முழுமையாகத் தனிமைப்படுத்தவும் ஆலோசனை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்க தற்போது இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் இ-பாஸ் சேவையை நிறுத்துவது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், மக்களும் ஒத்துழைக்காததால், கொரோனா பாதிப்பு அடங்க மறுக்கிறது. எனவே, நோய் பரவலை தடுக்க, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், ஒரு வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என, அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதுபற்றி அரசு பரிசீலித்து வருவதால் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.

Last Updated 9, Jun 2020, 11:22 AM

Source: https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/full-curfew-in-4-districts-including-chennai-e-pass-stop-qbn9n6