பொதுத் தேர்வு ஒத்திவைக்கக் கோரிய வழக்கு: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! | Madras high Court adjourns hearing on conducting class X exam in TN to june 11 – நியூஸ்7 தமிழ்

சென்னைச் செய்திகள்

10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால் மார்ச் மாதம் நடைபெறவிருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இச்சுழலில் வருகின்ற ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று மறு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. ஆனால் கொரோனா ரைவஸ் தாக்கம் குறையாததை சுட்டிக்காட்டி பொதுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள தேர்வில், தமிழகம் முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 2 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். 

பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து செயல்பட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, அதோடு மத்திய அரசு மாணவர்களுக்கு தேர்வை ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. 30% மாணவர்கள் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து தேர்வு எழுத வருகின்றனர் என மனுதரார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது, மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவைகள் முறையாக கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், தேர்வு எழுத வரும் 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்றும், பொதுத் தேர்வை தள்ளிவைக்க அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேர்வு நடத்த ஏன் இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறது? மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்தில் கொண்டு, ஜூலையில் பொதுத் தேர்வை நடத்த முடியாத? என்று நீதிபதிகள் சரமாரி கேள்வியெழுப்பினர். வரும் ஜூன் 15ம் தேதி பொதுத் தேர்வு எழுத அனுமதியளிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், மதியம் 2.30 மணிக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

இந்நிலையில், மதியம் உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி, பொதுத் தேர்வை தற்போதைய சூழலில் நடத்தாவிட்டால், பின்னாட்களில் நடத்துவது கடினம் என்று தெரிவித்தார். வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா உச்சமடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பதாக தெரிவித்தார். இதனால் தேர்வுக்கு தடைவிதிக்கக் கூடாது என்வும் வாதிட்டார். அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உத்ரவை மீறி மாநில அரசு தேர்வு நடத்த முடியுமா என்று கேள்வியெழுப்பினர்.  

மற்ற மாநிலங்களில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர், தேர்வு மையங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். தற்போது விடுத்து,  கொரோனா பாதிப்பு அதிகமாகும் காலகட்டத்தில் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு ஆபத்தானது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

இதையடுத்து 9 லட்சம் மாணவர்கள் மற்றும் 2 லட்சம் ஆசிரியர்களின் உயிர் சம்மந்தமான விஷயம் என்பதால், தமிழக அரசு பொதுத் தேர்வை தள்ளிவைக்க பரிசிலீக்க வேண்டும் எனவும், அரசின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடடிவக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்க செய்ய வேண்டும் என்வும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.[embedded content]

Source: https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important-editors-pick/8/6/2020/madras-high-court-adjourns-hearing-conducting