சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர தனியார் பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும் – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பஸ்கள் இன்று (புதன்கிழமை) முதல் இயக்கப்படும் என்று உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

சென்னை,

கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து அனைத்தும் கடந்த சில மாதங்களாக முடக்கப்பட்டன. இந்த நிலையில் பொது போக்குவரத்தில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டு, தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதில் 7 மற்றும் 8-வது மண்டலங்களில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டும் பொது போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் அந்த பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல், தனியார் பஸ்களை இந்த பகுதிகளில் இயக்குவது தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் சங்கத்தின் தலைவர் கே.தங்கராஜ், செயலாளர் தர்மராஜ், பொருளாளர் சிதம்பரம் உள்பட நிர்வாகிகள் சிலர் ஆலோசித்தனர். அப்போது அரசு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி இன்று(புதன்கிழமை) பஸ்கள் இயக்குவது குறித்து முடிவு எடுத்தனர்.

இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தங்கராஜ் கூறியதாவது:-

எங்களுடைய சங்கத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்படி, மண்டலத்துக்கு மண்டலம் செல்லாத வகையிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பஸ்கள் இயக்கப்படாததாலும் சுமார் 1,500 பஸ்கள் மட்டுமே 10-ந்தேதி (இன்று) முதல் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

60 சதவீத பயணிகள் மட்டுமே பஸ்களில் ஏற்ற அனுமதிக்க இருக்கிறோம். இதற்காக கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் உரிமையாளர்களுக்கு பெரிய அளவில் பலன் கிடையாது. இருந்தாலும் இந்த தொழிலை நம்பி இருப்பவர்களுக்கு சற்று உதவியாக இருக்கும். ஆகவே இதை செய்ய உள்ளோம். வரக்கூடிய நாட்களில் அரசு என்ன செய்ய சொல்கிறதோ? அதை முறையாக பின்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/06/10034445/Including-Madras-Except-for-4-districts-Private-buses.vpf