டூவீலரே போதும்.. குடும்பத்தோடு ஓட்டம் பிடிக்கும் சென்னை மக்கள்.. திருப்பியனுப்பும் போலீஸ்.. பரபரப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்து வருவதால், கார்கள் கிடைக்காவிட்டால் கூட, டூவீலரில் பிற மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைக்கிறார்கள்.

image

சென்னையை விட்டு வெளியேறும் மக்கள்.. ! இ –பாஸ் இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தம்!

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ளோரில் கணிசமானோர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான்.

இதுபோன்ற மக்கள் தொழில்நிமித்தமாகவோ, வேலை நிமித்தமாகவோ சென்னையில் வசித்து வருகிறார்கள். சிலர் சொந்த வீடுகளிலும், பலர் வாடகை வீடுகளிலும் இவ்வாறு வசித்து வருகிறார்கள்.

image10ம் வகுப்பு தேர்வை போலவே.. தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து? அமைச்சர் அன்பழகன் பதில்

சென்னையில் தென் மாவட்ட மக்கள்

இந்த மக்களில் பலருக்கும் தங்கள் சொந்த ஊர்களில் இன்னும் வீடுகள் பராமரிக்கப்படும் நிலையில் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ, கோவில் திருவிழாக்களுக்கும், உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் சென்றுவர இதுபோன்ற வீடுகள் பராமரிக்கப்படுகின்றன. பல வீடுகளில் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வு காலத்தை கழித்து வருகிறார்கள்.

சென்னையிலிருந்து ஓட்டம் பிடிக்கும் மக்கள்

இந்த நிலையில்தான், சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், அச்சத்தின் காரணமாக, தென் மாவட்டங்களை நோக்கி, அதாவது சொந்த ஊர்களை நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கார்கள் இல்லாதவர்கள், இரு சக்கர வாகனங்களில், அல்லது ஆட்டோக்களில், மனைவி, குழந்தையுடன் கிளம்பி செல்வதை பார்க்க முடிகிறது.

இ பாஸ் முக்கியம்

கார்களில் செல்லும்போது போலீசார் இ பாஸ் உள்ளதா என்பதை பரிசோதிக்கிறார்கள். இரு சக்கர வாகனம் என்றால், அவர்கள், அதே மண்டலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்.. தூரத்து ஊர்களுக்கு பைக்கில் எப்படிச் செல்ல முடியும் என நினைத்து, போலீசார் விசாரிப்பது இல்லை. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

போலீசாருடன் வாக்குவாதம்

இ பாஸ் இல்லாமல் வரக் கூடிய வாகனங்களை பரனூர் சோதனைச் சாவடியில் குவிக்கப்பட்டுள்ள போலீசார் தடுத்து நிறுத்தி, சென்னைக்கு திருப்பி அனுப்புகிறார்கள். இதுவரை அவர்களுக்கு எந்தவிதமான அபராதமும் விதிக்கப் படவில்லை. இருப்பினும் போலீசாருடன் அவர்கள், வாக்குவாதத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிந்தது.

பரனூர் விரைந்த மருத்துவ குழு

மணிக்கு மணி கூட்டம் அதிகரிப்பதால், பரனூர் சுங்கச்சாவடி பகுதிக்கு மருத்துவ குழுவினர் விரைந்து உள்ளனர். பைக், ஆட்டோ, கார் உள்ளிட்டவற்றில் இ பாஸ் இல்லாமல் வருவோரை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்படுகிறது. யாருக்காவது, நோய் பாதிப்பு அறிகுறி இருந்தால், அங்கேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். தனிமைப்படுத்தலுக்கு பயந்து வாகன ஓட்டிகள், தென் மாவட்டம் செல்ல அச்சமடைந்துள்ளனர். இதனால் இனி கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமழிசை சோதனை சாவடி

இதேபோல திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை சோதனைச் சாவடி பகுதியிலும், இ பாஸ் இல்லாமல், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் சென்றோர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். திருமழிசை வழியாக மேற்கு மாவட்டங்கள், கர்நாடகா மற்றும் ஆந்திராவிலுள்ள சொந்த ஊர்களுக்கு மக்கள் கிளம்பி செல்வார்கள் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/people-going-from-chennai-without-e-pass-stops-and-sent-back-388088.html