தேசிய தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த ஐஐடி மெட்ராஸ்! | IITs, IIMs and Delhi colleges dominate HRD Ministry’s India Rankings list – நியூஸ்7 தமிழ்

சென்னைச் செய்திகள்

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. 

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஆண்டுதோறும், சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி இரண்டாவது இடத்தையும், ஐஐடி டெல்லி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. 

அதே போல் ஐஐடி பாம்பே, காரக்பூர், கான்பூர், கவுஹாத்தி, ரூர்கி கல்வி நிறுவனங்களும் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளன. ஐஐஎஸ்சி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பெனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகிய ஐஐடி அல்லாத நிறுவனங்களும் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் ஐஐஎஸ்சி பெங்களூரு, ஜேஎன்யு டெல்லி, பிஹெச்யு வாரனாசி ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை ஐஐடி மெட்ராஸ், டெல்லி, பாம்பே முதல் மூன்று இடங்களில் உள்ளன. 11வது இடத்தை பிடித்திருக்கும் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்தான் இந்த பட்டியலில் ஐஐடி அல்லாத ஒரே ஒரு நிறுவனம்.

மருத்துவக் கல்லூரிகளில் டெல்லி எய்ம்ஸ், சட்டக் கல்லூரிகளில் பெங்களூருவின் நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா பல்கலைக்கழகம், கட்டடக்கலை தொடர்பான கல்லூரிகளில் ஐஐடி காரக்பூர், பல் மருத்துவக் கல்லூரிகளில் மவுலானா ஆசாத் டெண்டல் கல்லூரி ஆகியவை முதலிடத்தை பிடித்துள்ளன. 

தரவரிசை பட்டியலில் இடம்பெறுவதற்காக 5,808 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநரான பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், ‘தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளின் சிறந்த பணியால் இந்த நிலையை அடைந்துள்ளோம். இனி வரும்  ஆண்டுகளில் மேலும் சிறப்பாக செயல்படவும், சர்வதேச அளவில் ஒரு அடையாளத்தை உருவாக்கவும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்’ என கூறியுள்ளார்.

கல்லூரிகளை பொறுத்தவரை மிரண்டா ஹவுஸ் கல்லூரி இந்தியாவின் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி இரண்டாம் இடத்திலும், தி ஹிந்து கல்லூரி மூன்றாம் இடத்திலும் உள்ளது. சென்னையை சேர்ந்த பிரசிடென்ஸி கல்லூரி 4ம் இடத்திலும் லொயோலா கல்லூரி 5ம் இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: https://ns7.tv/index.php/ta/tamil-news/india/12/6/2020/iits-iims-and-delhi-colleges-dominate-hrd-ministrys-india-rankings-list