ஊரடங்கு நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி மனு: விரிவான விசாரணை நடத்த திட்டம்! | Madras High Court to Pass Orders on Petition Claiming Lockdown is Illegal – நியூஸ்7 தமிழ்

சென்னைச் செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், விரிவான விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்கப்படும், என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த புத்தக விற்பனையானர், இம்மானுவேல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மார்ச் 24 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தென் கொரியா, சுவீடன் போன்ற நாடுகள் ஊரடங்கு அறிவிக்காமலேயே, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்அவர் சுட்காட்டியுள்ளார். தன்னைப்போல குறைவான வருவாய் ஈட்டுவோர் சிரமப்படுவதாகவும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசு நெறிமுறைகளை கடைபிடித்தாலே, கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

ஊரடங்கை நீட்டித்த அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என்கிற அவரது மனுவை, நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், இதேபோன்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியதால், வழக்கை வரும் ஜூன் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Source: https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/6/2020/madras-high-court-pass-orders-petition-claiming-lockdown-illegal