பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும் மருத்துவ முகாம் – ஆணையாளர் கோ.பிரகாஷ் தகவல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும் நேற்று முதல் தினம்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்காக நேற்று முதல் சென்னையில் உள்ள 200 கோட்டங்களிலும், கோட்டத்திற்கு 2 மருத்துவ முகாம்கள் என அந்தந்த கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நாள்தோறும் வெவ்வேறு இடங்களில் 400 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

அதேபோன்று, மாநகர ஆரம்ப சுகாதார மைய மருத்துவர்கள் மூலம் 140 மருத்துவ முகாம்கள் என மொத்தம் 540 மருத்துவ முகாம்கள் கோட்ட நல அலுவலர்கள் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

140 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும் காலை 8 மணி முதல் பகல் 11.30 மணி வரை புற நோயாளிகள் பிரிவுக்கு வருகின்றவர்களுக்கு சிறு சிறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சை, அனைத்து வகை காய்ச்சலுக்கான சிகிச்சை, கர்ப்பகால பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுதல், எச்.ஐ.வி. பரிசோதனை, ரத்த அழுத்தம், கர்ப்பகால முன், பின் சிகிச்சை, தொற்று மற்றும் தொற்றா நோய்க்கான சிகிச்சை, ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி கண்டறிதல், தொடர் சிகிச்சை மற்றும் ஆய்வுக்கூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களையும், புறநோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருபவர்களையும் பரிசோதித்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையத்திற்கு பரிந்துரைக்கப்படுவர்.

அறிகுறி இல்லை என்றால், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்வது என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

இந்த மருத்துவ முகாம்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பயன் அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/Districts/2020/06/16071032/In-the-Metropolitan-Madras-Corporation-medical-camp.vpf