1,000 ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்.. 10,000 வெப்பமானி… வீடு வீடாக பரிசோதனை.. அதிரடியில் சென்னை மாநகராட்சி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு ‘தெர்மல் கன்’ (Thermal Gun) வழங்கி உள்ளோம் அதன் மூலம் ஒரு மீட்டர் இடைவெளியிலிருந்தே உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க முடியும் என்றும், மருத்துவ முகாம்களில் ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ (Pulse Oximetre) கருவி வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தெளிவாகக் கண்டறிய முடியும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணியில் 11 ஆயிரம் பேர், சுமார் 70 நாட்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறார்கள்..

கடந்த ஏப்ரலில் இருந்து வீடு வீடாக நடத்தப்பட்ட பரிசோதனையில் மட்டும் 40,882 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்து. அதில் 30 ஆயிரத்து 725 பேருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.. 17 ஆயிரத்து 11 பேரை கொரோனா பரிசோதனைக்காக அனுப்பினோம். இதில் 6,391 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் 60-70 சதவீதத்தினர் குணமடைந்து உள்ளார்கள்.

imageஅண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படையுங்கள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடிதம்

2.10 லட்சம் பேருக்கு பரிசோதனை

கொரோனா தொற்று உள்ளதா என சென்னை மாநகரம் முழுவதும் இதுவரை 2.10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் அறிகுறிகள் கண்டறியப்பட்டோருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தயவு செய்து மாநகராட்சி ஊழியர்களிடம் தொண்டை வலி, காய்ச்சல், இருமல், மூச்சுப் பிரச்சினை என கொரோனா அறிகுறி இருந்தால், ஒளிவு மறைவில்லாமல் உண்மையை கூறுங்கள்.

அறிகுறியை மறைத்தனர்

பல இடங்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள், ஏற்பட்ட உடல் பாதிப்பு குறித்து அரசிடம் தெரிவிக்காமல் உள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அப்படி மறைத்தவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் மட்டும் உடனே தங்களுக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறிகளை அரசிடம் கூறியிருந்தால் 10-15% உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும். களப்பணியாளர்களிடம் காய்ச்சல், சளி இருந்தால் உடனே மக்கள் தெரிவிக்கலாம்.

தெர்மல் கன் கொடுத்துள்ளோம்

அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்களின் குடும்பத்தினரையும் ‘பாசிட்டிவ்’ என்று கருதி உடனடியாகப் பரிசோதனை மேற்கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாநகராட்சிப் பணியாளர்களுக்கு ‘தெர்மல் கன்’ (Thermal Gun) வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஒரு மீட்டர் இடைவெளியிலிருந்தே அவர்கள் உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பார்கள்.

ஆக்ஸிஜன் அளவு தெரியும்

மருத்துவ முகாம்களில் ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ (Pulse Oximetre) கருவி வழங்கி உள்ளோம். இதன் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தெளிவாகக் கண்டறியும். இதில், 95-க்குக் கீழ் இருந்தால் கொரோனா அறிகுறிகள் உள்ளன என்பதையும் மருத்துவர்களை நாட வேண்டும் என்பதையும் உறுதி செய்துவிடும். இதை, அனைத்து மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கியுள்ளோம். மண்டலங்கள் 4, 5, 6-ல் 3 வார்டுகளுக்கு இதனை முழுமையாக வழங்கி இருக்கிறோம்.. இந்தக் கருவியை நிறைய கொள்முதல் செய்ய உள்ளோம். அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் இந்தக் கருவி உணர்த்திவிடும்” இவ்வாறு கூறினார்.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-commissioner-prakash-talk-about-pulse-oximeter-covid-screening-388805.html