தமிழகத்தில் 2,865 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,654 பேர் பாதிப்பு: சென்னை 45 ஆயிரத்தைக் கடந்தது – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,865 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,654 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 45,814 ஆக அதிகரித்துள்ளது.

2,865 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 57.7 சதவீதத் தொற்று சென்னையில் (1,654) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 67,468-ல் சென்னையில் மட்டும் 45,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 67.9 சதவீதம் ஆகும்.

37,763 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 55.9 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 67 ஆயிரத்தைக் கடந்து 70 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.

தமிழகம் 67 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், இன்று சென்னையும் 45 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 91 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,57,745.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 866 பேரில் சென்னையில் மட்டுமே 668 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 77.1 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 45,814-ல் 668 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.4 % ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.2 % ஆக உள்ளது.

இதனால் சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 580 முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒரு லட்சத்தைக் கடந்து 1.40 லட்சத்தை நோக்கிச் செல்கிறது. அங்கு 1,39,010 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் தொற்று எண்ணிக்கை காரணமாக மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. அதன் எண்ணிக்கை 70,390 அதற்கு அடுத்த இடத்தில் 67,468 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 28,371 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,211 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 2 மண்டலங்கள் 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. 2 மண்டலங்கள் 4,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. ராயபுரம் மண்டலம் 6,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. மொத்தம் 15 மண்டலங்களில் 11 மண்டலங்கள் 4 இலக்க எண்களைக் கடந்துள்ளது.

* தற்போது 47 அரசு ஆய்வகங்கள், 41 தனியார் ஆய்வகங்கள் என 88 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 28,836.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 9,76,431.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 32,079.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 8.9 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 67,468.

* மொத்தம் (67,468) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 41,678 (61.7%) / பெண்கள் 25,770 (38.2%)/ மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,865.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,781 (62.1%) பேர். பெண்கள் 1084 (37.9 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,424 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 37,763 பேர் (54.7%).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 33 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் தனியார் மருத்துவமனையிலும், 25 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 866 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 668 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரணங்கள் சதவீதம் அதிக அளவில் உள்ளன. 50 வயதுக்கு உட்பட்டோர் 8 பேர் ஆவர். இது 24.2 சதவீதம் ஆகும். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 30 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 3 பேர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,654 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 45,814 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 67.9 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 32.1 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 4,202, திருவள்ளூர் 2,907, காஞ்சிபுரம் 1,375, திருவண்ணாமலை 1,372, மதுரை 1073, கடலூர் 892, திருநெல்வேலி 680, விழுப்புரம் 654, தூத்துக்குடி 732, வேலூர் 580, ராணிப்பேட்டை 545, அரியலூர் 440, கள்ளக்குறிச்சி 448, சேலம் 404, கோவை 314, பெரம்பலூர் 168, திண்டுக்கல் 367, விருதுநகர் 275, திருப்பூர் 121, தேனி 365, திருச்சி 434, தென்காசி 277, ராமநாதபுரம் 338, தஞ்சாவூர் 335, கன்னியாகுமரி 200, நாகப்பட்டினம் 228, திருவாரூர் 272, கரூர் 129, புதுக்கோட்டை 101 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

37 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 4 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளன. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் தொற்று உறுதியாகியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 91 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 2,736 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 3,317 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 1,711 பேர் (51.5 %) . பெண் குழந்தைகள் 1,606 பேர் (48.5 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 56,124 பேர் (83.1 %). இதில் ஆண்கள் 34,966 பேர். (62.3%) பெண்கள் 21,138 பேர் (37.5 %). மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் (.04 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 8,027 பேர் (11.8 %). இதில் ஆண்கள் 5,001 பேர் (62.3 %). பெண்கள் 3,026 பேர் (37.7%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/560995-corona-virus-infections-in-tamil-nadu-affected-in-chennai.html