ஜூலை 6ம் தேதிக்கு பிறகு சென்னை மற்றும் பெருநகர பகுதிகளில் என்னென்ன இயங்கலாம்? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

தமிழகம் முழுக்க ஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் சென்னை பெருநகர காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஜூலை 5ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக ஜூலை 6ம் தேதிக்கு பிறகு சென்னை மற்றும் அதன் காவல் நிலையத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதென்பதை பார்க்கலாம்.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 6.7.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, பயன்படுத்தலாம். ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.

முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
ஒ. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/saloon-shop-and-auto-taxi-can-run-in-chennai-after-july-6th/articleshow/76694799.cms