சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வங்கிகள் எவ்வளவு நேரம் செயல்படும்? – கூட்டமைப்பு அறிவிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வங்கிகள் செயல்படும் நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், வரும் 5-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகள், 4-ந்தேதி வரை, 33 சதவீத ஊழியர்களுடன், காலை 10 மணி முதல், பகல் 2 மணிவரை செயல்படும். பிற பகுதிகளில் வழக்கம் போல் வங்கிகள் செயல்படும்.

ஊழியர்கள் மாற்று முறையில் பணிக்கு வரலாம். பெட்ரோல் நிலையங்கள், கியாஸ் ஏஜென்சி போன்ற, அத்தியாவசிய சேவைகள் வழங்கக் கூடிய, வினியோகஸ்தர்கள், டீலர்களிடம், ரொக்கப் பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்கு, நேரடி வங்கி சேவை வழங்க அனுமதி கிடையாது.

வருகிற 6-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை, 50 சதவீத ஊழியர்களுடன், வழக்கம் போல், மாலை 4 மணி வரை செயல்படும். அனைத்து நிர்வாக அலுவலகங்கள், காசோலை பரிவர்த்தனை பிரிவுகள் போன்றவை, 33 சதவீத ஊழியர்களுடன், 4-ந்தேதி வரை செயல்படும். அதன் பின் 50 சதவீத ஊழியர்களுடன், வழக்கம் போல் செயல்படலாம்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ஊழியர்கள், பணிக்கு வரத் தேவையில்லை. இருந்தாலும், உரிய அதிகாரியிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/07/01011213/How-long-will-banks-operate-in-5-districts-including.vpf