தமிழகத்தின் பிற நகரங்கள் நோக்கி நகரும் தொழில் வாய்ப்புகள்… சென்னை இனி? – Vikatan

சென்னைச் செய்திகள்

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 50% அளவுக்கு சென்னையை மையமாகவைத்தே நடந்துவந்தது. மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளெல்லாம் சென்னையைச் சுற்றியே அமைக்கப்பட்டுவந்தன. இதனால், சென்னையில் மட்டும் பெருமளவு வளர்ச்சி ஏற்பட்டு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் சென்னையை நோக்கிவரும் நிலை ஏற்பட்டது.

துறைமுகம், விமான சேவை போன்ற வசதிகள் சென்னையில் இருந்ததால், பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பெரும்பாலான தொழில்கள் சென்னையை மையமாக வைத்தே நடந்தன. ஆனால், இன்று கொரோனா நோய்த் தொற்று காரணமாக மக்கள் சென்னையைவிட்டுச் சென்று பல்வேறு நகரங்களில் வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

சி.ஐ.ஐ அமைப்பின் முன்னாள் தமிழக தலைவரும் டான்பாஸ் நிறுவனத்தின் தலைவருமான ரவிச்சந்திரன் புருஷோத்தமனிடம் சென்னையின் தொழில் சூழல் குறித்துக் கேட்டோம். “கோவிட் 19-க்குப் பிறகு சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸ் வேண்டுமானால் சென்னையைவிட்டு இடம்பெயரலாம். உதாரணமாக, ஐ.டி மற்றும் ஐ.டி சார்ந்த நிறுவனங்கள்.

ஆனால், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் சென்னையைவிட்டு பெரிய அளவில் செல்வதற்கு வாய்ப்பு குறைவு. இதற்குக் காரணம், சென்னையிலிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள். எல்லா நகரங்களுக்கும் போய் வருவதற்கேற்ப சாலை வசதிகள், விமான நிலையம், துறைமுகம் அமைந்திருப்பது, ஐ.ஐ.டி, லெதர் இன்ஸடிட்யூட் போன்ற ஆய்வு நிறுவனங்கள் இருப்பதால் ஆர் அண்ட் டி வசதிகள் இருப்பது, திறமையான நபர்கள் அதிக அளவில் வேலைக்குக் கிடைப்பது, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்வதற்கேற்ற சூழல் இருப்பது எனப் பல அம்சங்கள் சாதகமாக உள்ளன.

அதேவேளையில், ஐ.டி தொடர்பான பணியாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக இந்த நிலை தொடர்கிறது. இன்னும் சில மாதங்கள் இதே நிலைமை தொடரும்பட்சத்தில், இனி ஐ.டி தொழில் சென்னையைவிட்டுச் சென்றுவிடவே வாய்ப்பு அதிகம். ஐ.டி தொழில் மட்டுமல்ல, உற்பத்தி சார்ந்த வேறு தொழில்களும் சென்னை தவிர, பிற நகரங்களையும் நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கின்றன.

Source: https://www.vikatan.com/business/news/industries-are-now-targeting-cities-other-than-chennai