அடுத்த 24 மணி நேரத்தில்.. இந்த 7 மாவட்டங்களில் கன மழை கொட்டும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தூத்துக்குடி, கோவை உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு கடற்கரை மாநிலங்களில் நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது.

அதே நேரம், தமிழகத்தில் ஆரம்பத்தில் சில பகுதிகளில் மழை பெய்தாலும் பிறகு மழை பொய்த்துவிட்டது.

மழைப் பொழிவு

இந்த நிலையில்தான் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் தாக்கம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வரை தொடர்கிறது. சென்னையிலும் கடந்த வாரம், அவ்வப்போது மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்தது. இருப்பினும், பரவலாக தமிழகம் முழுக்க நல்ல மழை பொழிவு இல்லை. இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி இருந்த நிலையில், அடுத்தடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வரக்கூடிய அறிவிப்புகள் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன.

7 மாவட்டங்கள்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி

அடுத்த 24 மணி நேர நிலவரம் இதுதானாம். வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறதாம். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

மிதமான மழை

கடலோர தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால், ராமநாதபுரம் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானதுவரையிலான மழை பெய்யும்.

இடியுடன் மழை

நாளைக்கு, நீலகிரி, கோவை, மதுரை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடந்த ஒரு வார காலமாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கிறது என்பதால் வெப்பம் அதிக அளவுக்கு பதிவாகவில்லை.

10 மாவட்டங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக 3 சென்டிமீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாகும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/7-districts-in-tamilnadu-will-get-heavy-rain-says-chennai-meteorological-department-391703.html