சென்னை போலீசாருக்கு ஆன்லைன் யோகா பயிற்சி – தினமலர்

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னை : கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள, சென்னை மாநகர போலீசில் பணிபுரியும் கமிஷனர் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசாருக்கு ‘ஆன்லைன்’ வாயிலாக, யோகா மற்றும் தியான பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னையில், 1,500க்கும் மேற்பட்ட போலீசார், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 800 பேர், சிகிச்சைக்கு பின், பணிக்கு திரும்பியுள்ளனர். தற்போது பணியில் உள்ள போலீசார் அனைவருக்கும், முக கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்கப்பட்டுள்ளன. தினமும், கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அத்துடன், சென்னை மாநகர போலீசில் பணிபுரியும் போலீசாருக்கு, ஆன்லைன் வாயிலாக யோகா மற்றும் தியான பயிற்சி அளிக்க வேண்டும் என, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்களுடன் இணைந்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

அதன்படி, சென்னையில் நேற்று காலை, 7:00 மணி முதல், 8:30 மணி வரை, ஆன்லைன் வாயிலாக யோகா மற்றும் தியானம் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது.உணவு, உறக்கம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றின் வாயிலாக, மனம் மற்றும் உடலை எப்படி ஆரோக்கியமாக பேணி பாதுகாப்பது என்பது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சியை, கமிஷனர் துவக்கி வைத்தார். ஆன்லைன் யோகா மற்றும் தியான பயிற்சிக்காக, எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், பெரிய திரை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பணியிடத்தில் இருந்து, கமிஷனர், கூடுதல் கமிஷனர்கள், இணை, துணை மற்றும் உதவி கமிஷனர்கள் பங்கேற்றனர்.

அதேபோல, ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு என, அனைத்து பிரிவு போலீசாரும் பங்கேற்றனர். மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசாரும் பங்கேற்றனர். விடுமுறையில் இருக்கும் போலீசார், வீடுகளில் இருந்து, யோகா மற்றும் தியான பயிற்சியில் பங்கேற்றனர். இவர்கள் அனைவருக்கும் ‘ஸ்மார்ட் போன், லேப்டாப்’ உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘முதற்கட்டமாக 1,000க்கும் மேற்பட்ட போலீசாருக்கு பயிற்சி அளித்துள்ளோம். பகுதி வாரியாக, அனைத்து போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்படும்’ என்றனர்.

Advertisement

Dinamalar iPaper

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு விட்டேன்:  விஷால்


கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு விட்டேன்: விஷால்

முந்தய

புத்தகங்கள் போதிமரம்...


புத்தகங்கள் போதிமரம்…

அடுத்து








வாசகர் கருத்து



Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2583300