தனியார் ரயில்களின் பெட்டிகள் பராமரிப்பு: சென்னையில் பிரத்யேக பணிமனை அமைக்க திட்டம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: நாடு முழுவதும் தனியார் ரயில்களின் பெட்டிகள்  பராமரிப்புக்காக, பணிமனைகளை தயார் செய்யும் நடவடிக்கையில் ரயில்வே துறை இறங்கியுள்ளது. இதன்படி,  சென்னை தொகுப்பின் (கிளஸ்டர்) கீழ்,  தனியார் ரயில்களின் பெட்டிகள்  பராமரிப்புக்காக, சென்னையில் பிரத்யேக ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 தனியார் ரயில்கள்: ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க ஏற்கெனவே மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. இதன் ஒரு பகுதியாக, பயணிகள் ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 தனியார் ரயில்களை இயக்க ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்க அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் கடந்த ஜூன் 1-ஆம் தேதி வெளியிட்டது. 35 ஆண்டுகள் ரயில்கள் இயக்குவதற்கான ஏலம்  விடப்பட்டது. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும். பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியாரை அனுமதிக்கும் ரயில்வே அமைச்சகத்தின் முதல் திட்டம் இதுவாகும்.
109 வழித்தடங்களும்  12 தொகுப்புகளாக (கிளஸ்டர்கள்) பிரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்தம் 14  ரயில்கள் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன.  அவற்றில் 12 ரயில்கள் (இருமார்க்கமாக சேர்த்து மொத்தம் 24 ரயில்கள் )  தெற்கு ரயில்வேயின் சென்னை தொகுப்பின் கீழ் இயக்கப்படும். இரண்டு ரயில்கள் மற்ற தொகுப்பின் கீழ் இயக்கப்படும்.  சென்னை தொகுப்பில்,  சென்னை-மதுரை, சென்னை -கோவை, சென்னை-திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் தினசரி ரயில்கள் இடம்பெற்றுள்ளன. முன்மொழியப்பட்ட தனியார் ரயில்களின் தற்காலிக அட்டவணையை ரயில்வே வாரியம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. 
பிரத்யேக பணிமனை : இந்நிலையில், நாடு முழுவதும் தனியார் ரயில்களின் பெட்டிகள் பராமரிப்புக்காக பணிமனைகளை தயார்  செய்யும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது. இதன்படி, சென்னை தொகுப்பின் (கிளஸ்டர்) கீழ், அறிமுகப்படுத்தப்படும் தனியார் ரயில்களுக்காக, சென்னையில் ஒரு பிரத்யேக ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
சென்னையில் தனியார் ரயில்களின் பெட்டிகள் பராமரிப்புக்காக, பணிமனை அமைக்க புதிய இடத்தை வழங்கும் பணியை தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் ஒப்படைத்துள்ளது.
தனியார் ரயில் பராமரிப்பதற்காக ஒரு பணிமனையை அமைப்பது அந்த தனியார் நிறுவனத்தின் பொறுப்பாக இருந்தாலும், புதிய பணிமனை அமைப்பதற்கான இடத்தை மண்டல ரயில்வே வழங்க வேண்டும். எனவே, இது தொடர்பாக ஒரு அறிக்கையை ரயில்வே மண்டல தலைமையகம் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
 இது குறித்து  ரயில்வே வாரியத்தின் முதன்மை செயல் இயக்குநர்(கோச்சிங்)  ஏ.மதுகுமார் ரெட்டி அண்மையில்  வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: புதிய பணிமனைக்கான ஒரு இடம் அல்லது தற்போது ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனைகளில் இடம் வழங்கப்பட வேண்டும். 
இது ரயில்களை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தால் மேம்படுத்தப்படலாம். இந்த பணிமனைகளுக்கு ரயில் மற்றும் சாலை இணைப்பை ரயில்வே உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
மேலும், ஒவ்வொரு 7,000 கி.மீ. தொலைவு வரை ரயில் ஓடிய பிறகு, ரயில்களை சுத்தம் செய்தல், ஆய்வு செய்வதற்காக ரயில்வே பெட்டி பராமரிப்புப் பணிமனையில் சுத்தப்படுத்தும் பாதைகளில் இரண்டு மணி நேரத்துக்கு  இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இந்த ரயில்களின் நேரங்களுக்கு ஏற்ப நிலையங்களுக்கு வந்து செல்வது, இடங்களை ஒதுக்குவது தொடர்பாக அடையாளம் காண ரயில்வே மண்டலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
சால்ட் கோட்டார்ஸ்:  தற்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் பேசின் பாலம் பணிமனையில் பராமரிக்கப்படுகின்றன. இதுபோல, எழும்பூரில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்  சேத்துப்பட்டு கோபால்சாமி நகர் பணிமனையில் பராமரிக்கப்படுகின்றன. சென்னையில் காலியாக உள்ள நிலங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: சென்னை நகரத்துக்காக, நான்காவது முனையம் அமைப்பதற்கு சால்ட் கோட்டார்ஸில் உள்ள  இடம் முன்மொழியப்பட்டுள்ளது. தனியார் ரயில் பணிமனைக்கான இடத்தை அடையாளம் காணும் செயல்முறை மேற்கொள்ளப்படும்.  தொடர்ந்து, ரயில்வே வாரியத்துக்கு தெரிவிக்கப்படும் என்றனர்.

11 இடங்களில் பணிமனை
நாட்டில் மும்பை, தில்லி, ஹவுரா, சண்டீகர், பாட்னா, பிரயாக்ராஜ், ஜெய்ப்பூர், செகந்திராபாத், பெங்களுரு உள்பட 11 இடங்களில் தனியார் ரயில்களுக்கான பெட்டி பராமரிப்பு பணிமனை அமைக்கப்படவுள்ளன.

சென்னை தொகுப்பில் 24 ரயில்கள்
சென்னை-மதுரை, சென்னை-மும்பை, சென்னை-மங்களூர், புதுச்சேரி-செகந்திராபாத், சென்னை-கோவை, திருநெல்வேலி-சென்னை, திருநெல்வேலி-கோவை, சென்னை-திருச்சி, சென்னை-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-கன்னியாகுமரி, சென்னை-தில்லி, கொச்சுவேலி-கவுகாத்தி இடையே இருமார்க்கமாக மொத்தம்  24 ரயில்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் தமிழக தொகுப்பு ரயில்கள் தான் அதிக விலைக்கு (ரூ.3,221 கோடி) ஏலம் விடப்படுகிறது.

வேலை இழப்பு ஏற்படும்
இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறியது: ஒரு  ரயிலின் பெட்டிகளை பராமரிக்கும் பணியில் 24 ஊழியர்கள் ஈடுபடுவார்கள். தனியார் ரயில்கள் வருகையை தொடர்ந்து, அரசு ரயில்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும். பராமரிப்பு பணிமனையில் பணிபுரியும்  ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கையும் குறையும். இதனால், ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்படும். எனவே, தனியார் ரயில் இயக்கும் திட்டத்தை மத்திய அரசு  கைவிட வேண்டும் என்றார் அவர்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/aug/03/box-maintenance-of-private-trains-3444964.html