அமோனியம்: சுங்கத்துறையினருக்கு சென்னை காவல் துறை அறிவுறுத்தல் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை அருகே மணலியில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட்டை 3 நாள்களில் அப்புறப்படுத்துமாறு சுங்கத்துறைக்கு சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மணலியில் உள்ள தனியாா் சரக்கு பெட்டக மையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக 37 சரக்கு பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சுங்கத் துறை இணை ஆணையா் பழனியாண்டி, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி சுந்தரேசன், காவல் கூடுதல் ஆணையா் ஏ.அருண், இணை ஆணையா் பாலகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் சென்னை காவல்துறை அதிகாரிகள், மூன்று நாள்களுக்குள் அங்கிருந்து அமோனியம் நைட்ரேட்டை ஏலம் மூலம் விற்பனை செய்து அகற்றுமாறும் அல்லது விற்பனை செய்ய முடியாவிட்டால் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி கிடங்குகளுக்கு கொண்டு செல்லும்படியும் சுங்கத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருப்பதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/aug/08/ammonium-chennai-police-instruction-to-customs-3447043.html