சென்சார் கருவிகள் இல்லாமல் இயக்கப்பட்ட மெட்ராஸ் உரத் தொழிற்சாலை – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
மணலி உரத் தொழிற்சாலை

  • Share this:
சென்னை, மணலியில் மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் எனும்  உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து  கடந்த  மே 14-ஆம் தேதி இரவு அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.  அந்த ஆலையையொட்டி நெருக்கமாக வசிக்கும் மக்கள் பலரும் கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக புகார் அளித்தனர்.

வாயுக்கசிவு  ஏற்பட்டதாக  வந்த புகாரையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியை அடிப்படையாக் கொண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு தாமகா முன்வந்து வழக்காக எடுத்து  விசாரித்தது.

பின்னர் மத்திய சுற்றுச்சூழல் துறையின் சென்னை மண்டல அலுவலக அதிகாரி, மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தும், இந்த நிபுணர் குழுவானது வாயுக்கசிவு ஏற்பட்டதன் காரணம் மற்றும் பாதிப்பு குறித்து விரிவான ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவானது தற்போது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில், சிறிய அளவிலான வாயுக்கசிவு ஏற்பட்ட குழாயை மெட்ராஸ் உரத்தொழிற்சாலை நிறுவனம் மாற்றுவதாக உறுதியளித்துள்ளதாகவும், ஆனால் ஆலை மீண்டு உற்பத்தியைத் துவக்கும் முன்னர் அம்மோனியா வாயுக் கசிவைக் கண்டறிய சென்சார் கருவிகள் இரண்டை ஆலையில் பொறுத்த வேண்டும் என்று வாரியம் உத்தரவிட்டதை செயல்படுத்தாமலே மீண்டும் ஆலை உற்பத்தியை நிறுவனம் துவக்கி விட்டது.

2016-ஆம் ஆண்டு வர்தா புயலால் பாதிப்படைந்த 10 அம்மோனியா வாயுக் கசிவை கண்டறியும் சென்சார் கருவிகளுக்குப் பதிலாக புதிதாக 11 கருவிகளை பொருத்த வேண்டும் என்ற உத்தரவும் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்திருந்தது.

இதற்கு உரத்தொழிற்சாலை நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் புதிதாக சென்சார் கருவிகள் வாங்க ஆர்டர் கொடுத்திருந்தும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கத்தின் காரணமாக கருவிகள் இன்னும் வந்து சேரவில்லை எனவும் விரைவில் புதிய கருவிகள் பொறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த உரத் தொழிற்சாலையில் கசிவை தடுக்க சென்னை ஐ.ஐ.டி.யிடமிருந்து செயல் திட்டம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு இன்னும் 3 மாத காலம் அவகாசம் தேவைப்படுவதாக் நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையை வழங்க மேலும் கால அவகாசம் தேவை என்று கோரியதன் அடிப்படையில் மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


First published: August 9, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-manali-madras-fertilisers-kicks-starts-operations-without-setting-up-ammonia-leak-sensors-sath-mg-329673.html