‘கொரோனில்’ என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்திவைப்பு – ஐகோர்ட்டு உத்தரவு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

‘கொரோனில்’ என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்திவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆருத்ரா என்ஜினீயர்ஸ் நிறுவனம், கனரக தொழிற்சாலைகளில் எந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை ‘கொரோனில் 92 பி’, ‘கொரோனில் 213 எஸ்பிஎல்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது. கொரோனில் என்ற பெயரை சட்டப்படி பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இந்த மருந்துக்கு ‘கொரோனில்’ என்று பெயர் சூட்டியது. இதையடுத்து தங்களது நிறுவனத்தின் வணிகச் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஆருத்ரா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் தடைவிதித்து கடந்த வாரம் உத்தரவிட்டார்.

மேலும், இந்த இரு அமைப்புகளுக்கும் ரூ.10 லட்சம் வழக்கு செலவு (அபராதம்) விதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் மேல் முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், “கடந்த ஜூன் மாதம் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உத்தரகாண்ட் அரசின் முறையான அனுமதி பெற்றே ‘திவ்யா கொரோனில்’ மருந்து தயாரிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் முதல் விற்பனையை தொடங்கப்பட்டது. இந்தநிலையில், தனி நீதிபதியின் கடுமையான உத்தரவால் மனுதாரர் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.

இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை 2 வார காலம் நிறுத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/08/15004951/Madras-HC-stays-order-restraining-Patanjali-Ayurved.vpf