வழிபாட்டு கூடங்களை திறக்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சி – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வழிபாட்டு கூடங்களை திறக்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினையடுத்து. தற்போது தமிழக முதல்வரால் பல்வேறு நிலைகளில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்பட்ட பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ.10,000/-க்கும் குறைவாக உள்ள சிறு கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் மற்றும் இதர மதவழிபாட்டு கூடங்கள் 10.08.2020 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்..
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆண்டு வருமானம் 10,000/-க்கும் குறைவாக உள்ள சிறு கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் மற்றும் இதர மதவழிபாட்டு கூடங்கள் திறக்க பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெறுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் https://www.chennaicorporation.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவும் மற்றும் மேற்படி மத வழிபாட்டு தலங்களை
திறக்கும்போது பின்வரும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஆலய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
 வழிபாட்டுத்தலங்களில் தினமும் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.
 வழிபாட்டுத்தலங்களின் நுழைவாயிலில் பக்தர்களின் வசதிக்காக கைகளை சுத்தம் செய்ய சோப்புநீர் கலவைகைகளை கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.
 வழிபாட்டின் போது போதிய சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன் ஒருபோதும் அதிக கூட்டம் சேராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 வழிபாட்டுத்தலங்களுக்குள் உணவு பிரசாதங்கள் வழங்க அனுமதி இல்லை.
 வழிபாட்டுத்தலங்களின் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும் மற்றும் இதர பாதுகாப்பு முறைகளையும்
கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
 வழிபாட்டுத்தலங்ககளை திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேர விவரத்தினை நுழைவாயிலில் தவறாமல் அறிவிப்புபலகையில் தெரிவிக்க வேண்டும்.
 பக்தர்களைத்தவிர மற்ற வேறு நபர்கள் வழிபாட்டுத்தலங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது.
 வழிபாட்டுத்தலங்களில் பண்டிகை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ’நிர்ணயிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கையைவிட கூடுதலான நபர்கள் சேர்க்கைக்கு அனுமதி
இல்லை.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மேற்தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் அடிப்படையில், ஆண்டு வருமானம் 10,000/-க்கும் குறைவாக கொண்டு செயல்படும் மதவழிபாட்டு தலங்களை திறப்பதற்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றுகொள்ளலாம் எனவும், வழிபாட்டுத்தலங்களை திறக்கும்போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற தவறும்பட்சத்தில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/aug/15/you-can-apply-online-to-open-places-of-worship-chennai-corporation-3450470.html