சென்னை கோயம்பேட்டில் 3 ஆம்னி பஸ்கள் எரிந்து நாசம் – போலீசார் விசாரணை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் நேற்று நடந்த தீ விபத்தில் 3 பஸ்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு இருக்கிறது. பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால், அனைத்து பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்திலும் பஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பஸ் நிலைய வளாக சுற்றுப்புறச்சுவரின் ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு பஸ்சில் இருந்து நேற்று கரும்புகை வெளிவரத் தொடங்கியது. சில வினாடிகளில் அந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அடுத்தடுத்த நிமிடங்களில் அருகிலுள்ள 2 பஸ்களிலும் தீ பரவத்தொடங்கியது. இதனால் ஒரே நேரத்தில் 3 பஸ்களிலும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. பற்றி எரிந்த தீ காரணமாக பஸ்சின் கண்ணாடிகள் பெரும் சத்தத்துடன் உடைந்து நொறுங்கின. மளமளவென பற்றிய தீயால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

சம்பவ இடத்துக்கு எழும்பூர், கோயம்பேடு, ஜெ.ஜெ.நகர், அம்பத்தூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. முழுமையாக தீ அணைக்கப்பட்டது. ஆனால் இந்த தீ விபத்து காரணமாக 1 ஏ.சி. பஸ்., 2 ஏ.சி. அல்லாத பஸ்கள் என மொத்தம் 3 பஸ்களும் எரிந்து எலும்புக்கூடாக மாறின.

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலைய வளாகத்தில் பஸ்கள் எரிந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. தீ முழுவதும் அணைக்கப்பட்டாலும், அந்த பகுதி முழுவதும் காற்றில் நெடி இருந்தது.

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலைய வளாகத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது எனவும், அடிக்கடி பஸ்களின் பேட்டரி திருட்டு போய்விடுவதாகவும் அங்குள்ளவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்கு என்ன காரணம்? சமூக விரோதிகளின் வேலையா? எதிர்பாராமல் நடந்த விபத்தா? என்பது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்டமாக ஆம்னி பஸ் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்ய இருப்பதாகவும், அதனைதொடர்ந்து விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே ஆம்னி பஸ் நிலையத்தில் 3 ஆம்னி பஸ்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது. 

Source: https://www.dailythanthi.com/News/State/2020/08/24050031/3-Omni-buses-burnt-down-in-Chennai-Koyambedu–Police.vpf