புற்றுநோயின் தலைநகராக மாறிவரும் சென்னை: அன்புமணி எச்சரிக்கை – தினமணி

சென்னைச் செய்திகள்

புற்றுநோயின் தலைநகராக சென்னை மாறிவருவதாக பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் தில்லிக்கு அடுத்தபடியாக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்வது கவலையளிக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும், பெங்களூரில் உள்ள தேசிய நோய்த் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையமும் இந்த அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளன.

அதன்படி சென்னையில் ஆண்களைப் பொருத்தவரை எட்டில் ஒருவருக்கும், பெண்களில் ஏழில் ஒருவருக்கும் புற்றுநோய்த் தாக்கும் ஆபத்து உள்ளது. மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய மாநகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் புற்றுநோயால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம். அதேபோல், சென்னையிலுள்ள பெண்கள் மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய மாநகரங்களில் உள்ள பெண்களை விட புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகமுள்ளதாக இரு மருத்துவ நிறுவனங்களும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளன.

சென்னையில் புற்றுநோய் தாக்கம் குறித்த புள்ளி விவரங்களை படித்து விட்டு, கடந்து செல்வதற்காக வெளியிடப்படவில்லை. அவை நம்மிடையே எச்சரிக்கை மணியை அடித்துள்ளன. தமிழ்நாடு அரசும், சென்னை மக்களும் விழிப்புணா்வு அடைந்து புகையிலை மற்றும் மதுவின் பயன்பாட்டையும், அவற்றின் விற்பனையையும் கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்த சில ஆண்டுகளில் சென்னை புற்றுநோயின் தலைநகரமாக மாறுவதை தடுக்க முடியாது. சென்னை வாழ வேண்டுமானால் மதுவும், புகையும் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/aug/29/chennai-to-become-cancer-capital-anbumani-warns-3456582.html