மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண தொகையை விரைந்து வழங்க வேண்டும்: சென்னை மாநகராட்சியிடம் முறையீடு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை

தமிழகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று கடந்த ஜூன் 20-ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, வீடுகள்தோறும் சென்று ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. சென்னையில் ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும், இதுவரை 50 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும்தான் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, நிவாரணத் தொகையை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் சென்னை மாநகராட்சியிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நிவாரணத் தொகை வழங்கச் செல்லும்போது மாற்றுத் திறனாளிகள் வீடுகளில் இல்லாதது, சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டது போன்ற பல்வேறு காரணங்களால் நிவாரணம் வழங்குவது தாமதமாகி வருவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், மாற்றுத் திறனாளிகளுக்கு விரைந்து நிவாரணத் தொகை வழங்குவதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளோம். மேலும், ஒரிரு வாரத்துக்குள் சென்னையில் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்பு வாசகர்களே….

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு – இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

– வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/572377-chennai-corporation.html