சென்னை அணி பயிற்சி எப்போது – தினமலர்

சென்னைச் செய்திகள்

துபாய்: ஐ.பி.எல்., தொடருக்கான சென்னை அணியின் பயிற்சி வரும் செப். 4ல் துவங்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியான தீபக் சகார், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட 13 பேரை தவிர, மற்ற அனைவருக்கும் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கவுள்ள 13வது ஐ.பி.எல்., சீசனில் (செப். 19 – நவ. 10) பங்கேற்பதற்காக கேப்டன் தோனி தலைமையிலான சென்னை அணி, கடந்த ஆக. 21ல் துபாய் சென்றது. ஐ.பி.எல்., வழிகாட்டுதலின்படி 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின், ஆக. 28ல் பயிற்சியை துவக்க இருந்தனர். ஆனால், வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகார், இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சென்னை அணியினர் கூடுதலாக 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கடந்த ஆக. 31ல் எடுக்கப்பட்ட முதல் பரிசோதனையில், 13 பேரை தவிர மற்ற அனைவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில் நாளை மீண்டும் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் மீண்டும் ‘நெகடிவ்’ என்று முடிவு வரும் பட்சத்தில், செப். 4 முதல் சென்னை அணியினர் பயிற்சியை துவங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழிகாட்டுதலின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் தான் தீபக் சகார், ருதுராஜ் உள்ளிட்டோருக்கு பரிசோதனை நடத்தப்படும். இதில் தேறினால் அணியில் இணையலாம்.

இதன்மூலம் திட்டமிட்டபடி வரும் செப். 19ல் நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதலாம்.

இதுகுறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.,) காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘‘தீபக் சகார், ருதுராஜ் உள்ளிட்ட 13 பேரை தவிர மற்ற அனைவருக்கும் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. நாளை நடக்கவுள்ள மற்றொரு பரிசோதனையிலும் இவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதியானால், செப். 4ல் பயிற்சியை துவக்கலாம்,’’ என்றார்.

ரூ. 10 கோடி

ஐ.பி.எல்., தொடரின் போது வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக ரூ. 10 கோடி வரை செலவிடப் போவதாக பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 20 ஆயிரத்துக்கு மேலான பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பரிசோதனைக்கு ரூ. 4 ஆயிரம் வரை செலவிடப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக யு.ஏ.இ.,யை சேர்ந்த தனியார் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் 75 பேர் பணியாற்றுகின்றனர்.

கடந்த ஆக. 20 முதல் 28 வரை 1988 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

Source: https://sports.dinamalar.com/2020/09/1598978564/IPL2020T20CricketChennaiSuperKingsPractice.html