சென்னை சென்ட்ரலில் இருந்து ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கியது! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து, இன்று காலை முதல் ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.

சென்னை,

கொரோனா பேரிடர் காலமாக தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று முதல் ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கி உள்ளது.

அந்த வகையில் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

காலை 6.10 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவையை நோக்கி முதல் ரெயில் புறப்பட்டு சென்றது. முன்பதிவு செய்துள்ள பயணிகள் மட்டுமே ரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களும் புறப்பட்டு செல்ல இருக்கின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கி இருப்பதால் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதற்காகவும், பல பயணங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த பயணிகள் இன்று முதல் தங்கள் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள்.  இதனால் இந்த சிறப்பு ரெயிலில் ஏராளமான பயணிகள் தங்கள் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

ரெயில் நிலையங்களில் டிக்கெட்டுகள் கொடுக்கப்படுவதில்லை. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6ம் எண் வாயில் வழியாக மட்டுமே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நடைமேடை எண் 10 மற்றும் 11 ஆகியவற்றில் இருந்து ரெயில் இயக்கப்படுகின்றன.

பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் சானிடைசர் திரவத்தை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/09/07083545/Rail-transport-service-started-from-Chennai-Central.vpf