சென்னை: திருட்டு செல்போன்களுக்குப் போதை மாத்திரைகள்! – பகீர் பின்னணி – Vikatan

சென்னைச் செய்திகள்

இது குறித்து போலீஸார் கூறுகையில், “கைதான மொய்னுதீன், சாயுப் ஹுசைன், 17 வயது சிறுவன் மூவரும் நண்பர்கள். இவர்களில், 17 வயது சிறுவன் சென்னையிலுள்ள ஐ.டி.ஐ-யில் படித்துவருகிறார். சாயுப் ஹீசன், சென்னை ராயப்பேட்டையிலுள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்துவருகிறார். 17 வயது சிறுவன்மீது சென்னை திருவான்மியூரில் கத்திமுனையில் வழிப்பறி செய்த வழக்கு ஒன்று நிலுவையிலுள்ளது. கொரோனா ஊரடங்கில் வீடுகளிலேயே முடங்கிக்கிடந்த இவர்கள், வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு 17 வயது சிறுவன் மூளையாகச் செயல்பட்டிருக்கிறான். இதற்காக சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் டியோ பைக் ஒன்றைத் திருடியிருக்கிறார்கள். பின்னர் அந்த பைக்குக்கு ‘PICS ART’ என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஆர்.சி புக்கை எடிட் செய்து, போலியான ஆர்.சி புக்கைத் தயாரித்திருக்கிறார்கள். பின்னர் அந்த பைக்கில் 17 வயது சிறுவனின் போட்டோவை ஓட்டிக்கொண்டு வழிப்பறிச் சம்பவங்களில் மூவரும் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள்.

அரசு மருத்துவமனை ஊழியர் சாலமன் மற்றும் தீனதயாளன்

திருடிய செல்போன்களை அயனாவரத்தைச் சேர்ந்த தீனதயாளன் (56), அண்ணாநகரைச் சேர்ந்த சாலமன் (47) ஆகியோர் மூலம் விற்பனை செய்துவந்திருக்கிறார்கள். சாலமன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பிணவறையில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறார். சாலமன், தான் வேலைபார்க்கும் அரசு மருத்துவமனையிலிருந்து தூக்க மாத்திரைகளைத் திருடி மொய்னுதீன், சாயுப் ஹுசைன், 17 வயது சிறுவன் ஆகியோருக்குக் கொடுத்திருக்கிறார். அளவுக்கு அதிமாக அந்த மாத்திரைகளைச் சாப்பிடும்போது ஒருவிதமான போதையில் மூன்று பேரும் திளைத்திருக்கிறார்கள். அதற்கு அடிமையான மூவரும் சாலமனிடம் திருடிய செல்போன்களைக் கொடுத்து மாத்திரைகளை வாங்கிவந்திருக்கிறார்கள். இதையடுத்து அவர்களிடமிருந்து ஆறு செல்போன்கள், டூவீலர், அரசு முத்திரையிட்ட 140 தூக்க மாத்திரைகள், தங்க செயின் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள்’’ என்றனர்.

இவர்களைப் பிடிக்க அடையாறு, மயிலாப்பூர், ராயப்பேட்டை, சிந்தாரிப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 180-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்திருக்கிறார்கள். இதற்காக இணை கமிஷனர் பாபு, துணை கமிஷனர் விக்ரமன் ஆகியோர் தனிப்படை போலீஸாரைப் பாராட்டியிருக்கிறார்கள்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-5-members-in-robbery-and-cheating-case